திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஆ.ராசாவின் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அளித்த புகாரில், 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, ஆ.ராசா தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டது.
ராசாவின் விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அவர் 48 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது என தெரிவித்ததுடன், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்தும் ஆ.ராசாவை நீக்கி உத்தரவிட்டிருந்தது.