தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அகராதியிலிருந்து நீங்குமா அகதி என்னும் சொல்? இப்படிக்கு சக அகதி - சிரியா

ஒட்டுமொத்த மனித இனமே தேவையில்லாத பாரம் என்பதை இயற்கை நமக்கு ஆணித்தரமாக ஒருநாள் சொல்லும். இப்போதே அதற்கான அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. அவர்களிடம் மிச்சம் இருப்பது உயிர் மட்டும்தான்.

refugees
refugees

By

Published : Jun 20, 2019, 1:53 PM IST

Updated : Jun 20, 2020, 2:00 PM IST

’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற ஒரு புகழ்பெற்ற சொற்றொடர் தமிழில் உண்டு. ஆனால் அந்த சொற்றொடர் புகலிடம் தேடி தனது சொந்த நாடு, மண், வீடு, உறவுகள் அனைத்தையும் விட்டு உணர்வுகளையும், ஏக்கங்களையும், சோகத்தையும் சுமந்து அடுத்த நாட்டுக்கு வருபவர்களுக்கு அந்த சொற்றொடர் தரும் பொருளை நாம் தருகிறோமா என்றால் அது இல்லை. அகதிகள் என்றாலே அவர்கள் நாதியற்றவர்கள் என்பது போன்ற பிம்பத்தை இந்த உலக சூழலும், மனிதர்களும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

அகதிகள்

ஏற்கனவே தங்களது சொந்த நாட்டை விட்டுவந்த மீளமுடியாத உளவியல் சிக்கலில் இருக்கும் அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டியது அரவணைப்பை மட்டுமே. உலகளவில் அகதிகளின் தற்போதைய எண்ணிக்கை சுமார் ஏழு கோடி. நாள் ஒன்றுக்கு தங்களது நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 28,300 என்கிறது ஒரு புள்ளிவிவரம். தங்களது அரசியல் லாபத்துக்காக பல நாடுகளில் உள்நாட்டு போரை உருவாக்கியும், தங்களுக்கு எண்ணெய் வேண்டும் என்பதற்காக பல நாடுகளின் மீது வல்லாதிக்க அரசுகள் போரை ஏவியும் அகதிகளை உருவாக்கி வருகின்றன. அதனை மற்ற நாடுகளும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

வல்லாதிக்க நாடுகளை எதிர்த்து எப்படி சண்டை செய்வது என்ற கூற்றை வளரும் நாடுகள் முன்வைக்கலாம். சரி சண்டை செய்ய முடியாது, ஆனால் அகதிகள் வருவது வளரும் நாடுகளுக்குத்தான். அவர்களிடம் வளரும் நாடுகளே வல்லாதிக்க நாடுகள் போலத்தானே நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு மணி நேரம் அகதிகள் முகாமுக்குள் சென்று வந்தால் அந்த வலி என்னவென்று புரியும்.

அகதிகள்

2015ஆம் ஆண்டு சிரியாவில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரால் பெருமளவில் அந்நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தஞ்சம் அடைந்தனர். அப்போது தாய்லாந்து கடற்கரையில் அய்லான் என்ற மூன்று வயது சிறுவன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் உலகையே உலுக்கியது. அந்த நிழற்படத்தை கண்டு அனைவரும் மனம் உருகினர். ஆனால், அகதிகள் உருவாவது மட்டும் நிற்கவில்லை. அகதிகள் உருவாவதற்கு போர் என்ற ஒற்றைக் காரணம் மட்டுமில்லை. நில நடுக்கம், வறட்சி போன்ற காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நில நடுக்கம் என்பது இயற்கை. அதை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் போர், வறட்சி ஆகியவைகளை மனிதர்கள் தடுத்து நிறுத்தலாம். ஆனால் ஏனோ அந்த எண்ணம் மட்டும் எழ மறக்கிறது. எழ மறக்கிறதா இல்லை மறுக்கிறோமா என்பதை நாம்தான் கூற வேண்டும்.

அய்லான்

உலகம் முழுவதும் இருக்கும் ஏழு கோடி அகதிகளில் 18 வயதுக்குட்பட்டோர் பாதிக்கும் மேல் இருக்கின்றனர். இளைஞர்களின் கையில்தான் இந்த உலகத்தின் எதிர்காலமே இருக்கிறது. ஆனால் அவர்கள் தங்களது பதின்ம வயதுகளிலேயே அகதிகளாக மாறுவது ஒருபுறம் என்றால் அகதிகள் ஆக்கப்படுவதால் அவர்கள் உளவியல் ரீதியாக சந்திக்கும் சிக்கல்கள் மறுபுறம். இளைய வயதில் உளவியல் ரீதியாக சிக்கல்களை சந்திப்பவர்களால் எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற விபரீதத்தை வல்லாதிக்க நாடுகள் உணர்ந்தால் போதும் அகதிகள் உருவாக்கம் நின்றுவிடும்

உலகிலேயே மிகவும் கொடுமை தமக்கு ஒரு வீடு இருந்தது, நிலம் இருந்தது, ஊர் இருந்தது, உறவுகள் இருந்தார்கள் இப்போது ஒன்றுமே இல்லையே என்ற எண்ணம்தான். ஆம், இங்கு உருவாகும் அகதிகள் பெரும்பான்மையானோர் அவர்களுக்கே தெரியாமல் அகதிகளாக ஆகிறார்கள் என்பதைவிட ஆக்கப்படுகிறார்கள் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மை. ஏனெனில் இங்கு சக உயிர் மேல் கொள்ளும் மதிப்பைவிட பெட்ரோல்களும், கரன்சிகளும், டாலர்களும், அதிகாரப் போதையும் முன்னிலை வகிக்கின்றன.

விடைகொடு எங்கள் நாடே

அன்பையும், அறத்தையும் போதிக்கும் மதம் பௌத்தம் என மார்தட்டிக் கொள்பவர்களாலும், மியான்மர் ராணுவத்தினராலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்நாட்டிலிருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இதில் கொடுமை என்னவென்றால் அங்கிருந்து விரட்டப்பட்ட மக்கள் வங்கதேசம் எல்லையில் இருக்கும் காக்ஸ் பஜார் என்ற இடத்தில் தங்கியிருந்தனர். அங்கு 2018 ஜூன் 14ஆம் தேதி நிலவரப்படி நாள் ஒன்றுக்கு சுமார் 60 குழந்தைகள் பிறந்தன. பிறந்து விவரமறிந்த பின் அகதியாக மாறினாலே அக சிக்கலும், புற சிக்கலும் நம்மைத் துளைத்தெடுக்கும். ஆனால் பிறக்கும்போதும் அகதியாகவே பிறந்து, அகதியாகவே வளர்வதெல்லாம் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

ரோஹிங்கியா அகதிகள்

இதில் மற்றொரு அவலநிலை என்னவென்றால் அவர்களது நாடுகளை விட்டு வெளியேறி தங்கள் நாட்டுக்கு வர நினைப்பவர்களை சில நாடுகள் அகதிகளாக ஏற்றுக்கொள்ள மறுத்துவருகின்றன. இந்த உலகத்தில் அன்பும், அறமும் உடைந்து வருகிறதோ என்கிற அச்சம் நிலவுகிறது.

இந்த பூமியில் அன்பு, சக உயிர் மீதான மதிப்பு, கருணை ஆகியவை முதன்மையாக வேண்டும். தங்கள் நாட்டைவிட்டு அடுத்த நாட்டுக்கு வந்தவர்கள் எல்லாம் நமக்கு அடிமை, தேவையில்லாத பாரம் என்று நினைப்பதை உடனடியாக நிறுத்தி மனிதநேயம் போற்றுவதே நலம். ஏனெனில் இந்த எண்ணம் மேலோங்கினால் ஒட்டுமொத்த மனித இனமுமே தேவையில்லாத பாரம் என்பதை இயற்கை நமக்கு ஆணித்தரமாக ஒருநாள் சொல்லும். இப்போதே அதற்கான அறிகுறிகளும் தென்படவே ஆரம்பித்திருக்கின்றன. அவர்களிடம் மிச்சம் இருப்பது உயிர் மட்டும்தான்.

கூடுகள் மட்டும் ஊர்வலம்

உண்மையில் சொல்லப்போனால் இங்கு அகதிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே அகதிகள் இல்லை. அனைத்து மனிதர்களுமே இந்த பூமியில் தற்காலிகமாக வாழ வந்திருக்கும் அகதிகள்தான். அகதிகள் விஷயத்தில் ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு. அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாம் அடையாளப்படுத்தப்படவில்லை. ஒருநாள் நாமும் அகதிகளாக அடையாளப்படுத்தப்படுவோம். எனவே சக அகதிகளே, நாமும் அகதிகள்தான் என்பதை உணர்ந்து உலக அகராதியிலிருந்து அகதி என்ற வார்த்தையை நீக்குவோம். இப்படிக்கு பூமியில் தற்காலிகமாக வாழ வந்திருக்கும் உங்களுடனே இருக்கும் ஒரு அகதி!

Last Updated : Jun 20, 2020, 2:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details