சென்னை:ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் இவ்வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிற்குள் ஒமைக்ரான் வைரஸ் நுழையாமல் தடுக்க மாநில அரசு, விமான நிலைய அலுவலர்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இம்மாதம் டிசம்பா் முதல் தேதியிலிருந்து லண்டன், சிங்கப்பூர் போன்ற அதிக இடர் உள்ள 12 நாடுகள் - இத்தாலி, ஜொ்மனி, ரஷ்யா ஆகிய இடர் குறைவாக உள்ள 44 நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை சென்னை விமான நிலையத்திலேயே நடத்தப்படுகிறது.
பயணிகள் வசதிக்காக கூடுதல் கவுன்ட்டர்கள்
இதில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை எடுக்கும் பயணிகள் ஆறிலிருந்து ஏழு மணி வரையிலும், ரேபிட் பரிசோதனை எடுக்கும் பயணிகள் ஒரு மணி நேரம் வரையிலும் காத்திருக்கும் நிலை இருந்தது.
இது பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை எடுத்து காத்திருக்கும் பயணிகளுக்குக் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, அவா்கள் காத்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆா்டி-பிசிஆா் பரிசோதனை எடுக்கும் பயணிகளுக்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள்ளும், ரேபிட் பரிசோதனை எடுக்கும் பயணிகளுக்கு 30 லிருந்து 45 நிமிடங்களுக்குள்ளும், மாற்று உள்நாட்டு விமானங்களில் செல்லக்கூடிய டிரான்சிஸ்ட் பயணிகளுக்கு 20 நிமிடங்களிலும் சோதனை முடிவு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு குடியுரிமை, சுங்கச்சோதனை பிரிவுகளில் கூடுதல் கவுன்ட்டா்கள் திறக்கப்பட்டு, பயணிகள் தாமதமில்லாமல் மருத்துவப் பரிசோதனை பகுதிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதைப்போல் மருத்துவப் பரிசோதனை முடிந்து காத்திருக்கும் பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருக்கைகள் எண்ணிக்கை 450 லிருந்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறைப்பு எக்ஸ்சேஞ்ச் கவுன்ட்டர்கள்
மேலும் அப்பகுதியில் காபி, ஸ்நாக்ஸ் நியாயமான விலையில் கிடைக்க கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தனி அறை, வை-பை, இலவச தொலைபேசி வசதிகள், பொழுதுபோக்குச் சேனல்களுடன் தொலைக்காட்சி, விமானங்கள் வருகை-புறப்பாடு அறிவிப்புப் பலகை, வெளிநாட்டுப் பணங்களை மாற்றுவதற்கான எக்ஸ்சேஞ்ச் கவுன்ட்டா்கள் போன்றவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு 700 லிருந்து 800 பயணிகளுக்குச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. பயணிகளுக்கு மேலும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு சென்னை விமான நிலைய அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் இந்துக்கள் விரைவில் சிறுபான்மையினராக மாறுவர் - தொகாடியா கவலை