சென்னை: கோயில் காணிக்கை நகைகளை உருக்குவது ஒரு புரட்சிகரமான திட்டம் எனவும், இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் இது செய்யப்படுவதாகவும் குறிப்பிடுகிறார் சேகர்பாபு.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுர ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 49 கிரவுண்ட் இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சேகர்பாபு ஆய்வுமேற்கொண்டார். இதில் துறையின் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த சேகர்பாபு, "சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான 49 கிரவுண்ட் இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இருக்கும் பழம்பெரும் கட்டடத்தை வேறு பயன்பாட்டிற்குக் கொண்டுவர ஆய்வுமேற்கொள்ள கட்டட அமைப்பாளர் கொண்ட தனியார் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதில் ஆய்வு நடத்தி அந்த அறிக்கை பெற்றதும் என்ன செய்யலாம் என்பது முடிவெடுக்கப்படும்.
இந்த இடத்தை ஆக்கிரமித்தவர்கள் 12 கோடி ரூபாய் வாடகை செலுத்த வேண்டியுள்ளது; அதனைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
திமுக அரசு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்பிற்கு மேலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. மேலும், ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.
சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளாரே என்ற கேள்விக்கு, "இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்ள அதிகாரத்தின்படியும் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள், இணை ஆணையர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
திருக்கோயில்களில் 2011ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்துள்ள வழக்கைச் சந்திக்க இந்து சமய அறநிலையத் துறை தயார்" எனப் பதிலளித்தார்.
மூட்டை மூட்டையாகக் காணிக்கை
"கரோனாவைக் கட்டுப்படுத்தவே வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. கோயில்களைத் திறப்பதில் பாரபட்சம் கிடையாது.
ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இந்து கோயில்கள் மட்டும் மூடப்பட்டுள்ளன என்ற தவறான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது" என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சேகர்பாபு பதில் கூறினார்.
கோயில்களில் நகைகளைத் தங்கக் கட்டிகளாக பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளதற்குப் பதிலளித்த அவர், "சமயபுரம் திருக்கோயிலில் மூட்டை மூட்டையாகக் காணிக்கை நகைகளைக் கட்டிவைத்திருந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக நகைகளைக் கட்டிவைத்திருந்ததாகக் கூறினார்கள்.
அய்யப்பன் மீது ஆணை
இதை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்றோம். பயன்பாட்டிற்கு இல்லாத, உடைந்த நகைகளை மட்டுமே உருக்கத் திட்டமிட்டுள்ளோம். மன்னர்கள், ஜமீன்தார்கள், அறங்காவலர்கள் கொடுத்த நகைகளை உருக்க முயற்சிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகைகள் அப்படியே உள்ளன.
ஓய்வுபெற்ற நீதிபதிகளின் முன்னிலையில் நகைகளைக் கணக்கிடும் பணியில் ஈடுபட உள்ளனர். நகைகளைப் பிரித்து முழுவதுமாக காணொலி பதிவுசெய்யப்படும். ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள நிறுவனத்திடம் அளித்து 24 கேரட் தங்கக் கட்டிகளாகப் பெறப்பட்டு, வைப்பு வங்கியில் வைத்து வட்டித்தொகை பெரிய அளவில் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள்.
இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையிலான திட்டமே தவிர, மண்ணில் தூசி அளவுகூட இதில் தவறு நடக்காது என அய்யப்பன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். இது ஒரு புரட்சிகரமான திட்டம். எனவே இதை யாரும் விமர்சிக்க வேண்டாம்" என வலியுறுத்தினார்.
பள்ளியை எடுத்து நடத்தும் இந்து சமய அறநிலையத் துறை
அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு தஞ்சை நடராசர் சிலை ஒப்படைக்கப்பட்டதைத் தமிழ்நாடு கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு, "அதற்கான அலுவலர்கள் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்கள். பாதுகாப்பு அமைச்சகம் என்பதால் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதைத் தமிழ்நாடு எடுத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 141 கிரவுண்ட் ஆக்கிரமிப்பினை இந்து அறநிலையத் துறை மீட்டுவருகிறது. முன்னதாக 32 கிரவுண்ட் மீட்கப்பட்டது. இதே இடத்தில் இன்று 44 கிரவுண்ட் இடம் மீட்கப்பட உள்ளது.
மொத்தமாக அரசு மதிப்பீட்டின்படி இந்த இடத்திற்கு சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரும் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதே இடத்தில் செயல்பட்டுவரும் பள்ளியை இந்து சமய அறநிலையத் துறை எடுத்து நடத்த முடிவுசெய்துள்ளது.
மேற்கொண்டு இந்த இடத்தில் என்ன செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டுவருகிறது. மேலும் விரைவில் இதுவரை திமுக ஆட்சியில் மீட்கப்பட்ட கோயில் சொத்து விவரம் வெளியிடப்பட உள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கோயில் ஆக்கிரமிப்பு நில மீட்பு வேட்டை தொடரும்