தமிழ்நாடு

tamil nadu

அழைப்பை பதிவுசெய்து அவர்களை பேச அனுமதிக்கலாமே? முருகன் - நளினி விவகாரத்தில் நீதிபதிகள்

By

Published : Aug 19, 2020, 5:13 PM IST

தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய்க்கு ஆறுதல் கூற, சிறைத்துறை அலுவலர்கள் முன்னிலையில் அழைப்பைப் பதிவு செய்துகொள்ளும் வசதியுடன் பேச அனுமதிக்கலாமே? என தெரிவித்த நீதிபதிகள், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் பேச நளினி - முருகன் தம்பதியருக்கு அனுமதி வழங்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

hc bench on murugan nalini plea
hc bench on murugan nalini plea

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் பேச நளினி - முருகன் தம்பதியருக்கு அனுமதி வழங்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாகவுள்ள நளினி, முருகன் ஆகியோரை லண்டனிலுள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையிலுள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ்-ஆப் காணொலி அழைப்பு மூலம் பேச அனுமதிக்கக்கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கின் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

உறவினர்களுடன் முருகன், நளினி பேச அனுமதிக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை!

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(ஆக.19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், பன்நோக்கு விசாரணை முகமையின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, ஜூலை 27ஆம் தேதியே மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ராஜீவ் கொலை வழக்கிலுள்ள அயல்நாட்டு தொடர்புகள் குறித்த விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், நளினி, முருகன் ஆகியோரை வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது வழக்கு விசாரணையை பாதிக்கும் எனவும், சிறை அலுவலர்கள் மூலம் அவர்கள் பேசுவதை கண்காணித்தாலும் முக அசைவு, உருவ அசைவில் அவர்கள் கருத்துக்களை பரிமாற்றக் கூடும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து சிறைத் துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், கடந்த 2011ஆம் ஆண்டு அரசாணையின் படி சிறைக் கைதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி இல்லை எனவும், இந்தியாவிற்குள் உள்ள உறவினர்களுடன் 10 நாளைக்கு ஒரு முறை, மாதம் ஒன்றுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் 3 அழைப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும், எனினும் அது சிறைவாசிகளின் அடிப்படை உரிமை இல்லை எனவும், சிறைத் துறை கண்காணிப்பாளரின் அனுமதிக்கு உள்பட்டது எனவும் தெரிவித்தார்.

அமெரிக்க தேர்தல் பற்றியா முருகனும் நளினியும் பேசப் போகிறார்கள்? - நீதிபதி கிருபாகரன்

மேலும் முருகன் ஏப்ரல் மாதம் கூட, வேலூரில் உள்ள அவரது சகோதரியுடன் பேசியதாகவும், நளினியும் மார்ச் மாதம் அவரது உறவினர்களுடன் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய்க்கு ஆறுதல் கூற, சிறைத்துறை அலுவலர்கள் முன்னிலையில் அழைப்பை பதிவு செய்துகொள்ளும் வசதியுடன் பேச அனுமதிக்கலாமே? என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details