தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Chennai Flood: சென்னையில் தீவாகக் காட்சியளிக்கும் கிராமம்; காரணம் என்ன?

பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் திருவொற்றியூரை அடுத்த சடையப்பன்குப்பம் போன்ற ஊர்களை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததற்கான காரணம், நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு, மழை, வெள்ளக் காலங்களில் மக்கள் சந்திக்கும் பிரச்சனை, இதற்கான நிரந்தரத் தீர்வுகள் குறித்து அப்பகுதி மக்களை களத்தில் சந்தித்து கேட்டறிந்து ஈடிவி பாரத் இத்தொகுப்பை வெளியிடுகிறது.

Chennai Sadayankuppam
Chennai Sadayankuppam

By

Published : Nov 21, 2021, 11:52 AM IST

Updated : Nov 21, 2021, 3:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகம் பதிவாகியது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பூண்டி ஏரியில் நேற்று முன்தினம் (நவ. 19) அதிகபட்சமாக 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. சென்னையை அடுத்த மணலிபுதுநகர், திருவொற்றியூரில் சில பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.

தீவாக மாறிய கிராமம்

சென்னை திருவொற்றியூரை அடுத்த சடையன்குப்பம் ஊரின் பர்மா நகர், இருளர் காலணி பகுதிகள் வெள்ளம் சூழந்து தீவுகள் போல் காட்சியளிக்கின்றன. அவ்வூருக்குச் செல்லும் இரு வழிகளில் ஒரு வழி முழுமையாக வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. மற்றொரு வழியில் கார், மினிவேன் போன்ற வாகனங்களில் நிவாரணப் பொருள்கள் எடுத்து செல்லப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வள்ளி என்பவர் கூறியதாவது, "மழை, வெள்ளத்தால் ஊர் முழுவதும் நீர் சூழந்துள்ளது. இதனால், போக்குவரத்து மேற்கொள்ள இயலாமல் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறோம். 2015ஆம் ஆண்டு புயலுக்குப் பின்னர் தற்போது தான் வீடு முழுவதும் தண்ணீர் வந்துள்ளது" என்றார்.

தனியார் ஆக்கிரமிப்புகள்

சடையன்குப்பம், பர்மா நகர் தலைவர் செல்வம் நம்மிடம் கூறியதாவது, "2015 ஆம் ஆண்டு புயலுக்குப் பின்னர் தற்போது தான், நாங்கள் இதுபோன்ற இன்னல்களை சந்தித்துள்ளோம். மழைக் காலங்களில் நீர் வருவது இயல்புதான்.

ஆனால் வந்த நீர் வடியாமல் அப்படியே இங்கு தேங்கி நிற்கிறது. ஏனென்றால், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள நீர் செல்லும் பாதைகளை இங்குள்ள தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதனாலேயே நாங்கள் இன்னலை சந்தித்து வருகிறோம்" என்றார்.

தீவாகக் காட்சியளிக்கும் கிராமம்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சடையன்குப்பத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கமலகண்ணன், "2015ஆம் ஆண்டு புயல் மட்டுமல்ல, மழை, வெள்ளம் என்றாலே இந்தப் பகுதிதான் அதிக அளவில் பாதிக்கப்படும். எங்கள் ஊரை சுற்றியிருந்த ஆறு நீரோடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது நிறுவனங்களாக உள்ளன. இதனால், இப்பகுதியைச் சேர்ந்த நாங்கள் மிகுந்த சிரமம் அடைந்துவருகிறோம்.

இந்த வெள்ள நீரினால் கனரக வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் மூலம் எங்களால் எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. இங்கு வழங்கப்படும நிவாரணப் பொருள்களும் போதுமானதாக இல்லை. எங்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக நீரோடைகள் ஆக்கிரமிப்பை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

அத்தியாவசியப் பொருள்கள் தேவை

சடையன்குப்பத்தைச் சேர்ந்த பூங்கொடி, "மழை வெள்ளத்தால் எங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. சாதாரண பலகைகளைப் பயன்படுத்தி வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டில் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் உள்ளனர்.

மேலும் கொசுத் தொல்லையும், அடிக்கடி பூச்சிகளும் வந்து விடுகின்றன. எங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

பூண்டியும் புழலும்

பூண்டி ஏரியிலிருந்து வரும் கொசஸ்தலை ஆறும், புழல் ஏரியிலிருந்து வரும் கொசஸ்தலை ஆறும் சந்திக்கும் இடத்துக்கு அருகில் சடையன்குப்பம் கிராமம் அமைந்துள்ளது .

பூண்டி ஏரியிலிருந்து நேற்று முன்தினம் (நவ.19) 30 ஆயிரம், 35 ஆயிரம் எனத் தொடங்கி அதிகபட்சமாக 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் புழல் ஏரியில் இருந்து குடிநீருக்குத் தேவையான தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

தீவாக மாறக் காரணம்

எனவே இரு ஆறுகளும் சந்திக்கும் இடத்தில் புழல் ஏரியில் இருந்து நீர் வரதாததால், பூண்டியில் இருந்து வரும் நீர், புழல் ஏரிகளின் நீர்வழிப்பாதையில் புகுந்து சடையன்குப்பம் கிராமத்தை தீவாக மாற்றியுள்ளது.

இதனால் அங்கு வசிக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் குழந்தைகளுடன் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது பூண்டி ஏரியின் நீர் திறப்பு 23,500 கன அடியாக குறைக்கப்பட்டிருப்பதால் சடையன்குப்பத்தைச் சுற்றியுள்ள நீர் வடியும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இதையும் படிங்க: Helicam shoot: கடலூரில் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புகள், விவசாய நிலங்கள்!

Last Updated : Nov 21, 2021, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details