கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி, கடந்த 13 ஆம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் தெரிவிக்கும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு 49 வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நீதிபதி, "உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் எனவும், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா? போராட்டம் நடத்த அனுமதியளித்தது யார்? சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் நீதிமன்றம் எதற்கு? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளீர்கள்.
வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும். பள்ளியில் படிக்கும் 4,500 மாணவர்களின் நிலை என்ன? அவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது கோபத்தில் நடந்த வன்முறையாக தெரியவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே தெரிகிறது" என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், அமைதிப்பூங்கா என்ற பெயர் எடுத்த தமிழ்நாட்டில் அந்த நம்பிக்கையை குலைத்து விட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். அதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, மாணவியின் பெற்றோர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை எனவும், முன்னாள் மாணவர்கள் வாட்ஸ் ஆப் குழு மூலம் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர் என விளக்கமளித்தார்.