தருமபுரி மாவட்டம் சின்ன காணஹல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தனது குழந்தைகளுக்கு பழங்குடியினர் பிரிவு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின்னர், மாநில கூர்நோக்கு பரிசீலனை குழுவுக்கு விண்ணப்பித்த ஜெயலட்சுமியின் குழந்தைகளுக்கு, சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது.
ஆனாலும், பழங்குடியினர் சான்றிதழை வருவாய் கோட்டாட்சியர் வழங்காததால், ஜெயலட்சுமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த 11ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ஆர். சுரேஷ்குமார் அமர்வு, அதிகாரிகளின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, கூர்நோக்கு குழு பரிந்துரைத்த பிறகும் சாதி சான்றிதழ் வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பியது.
மேலும், சாதி சான்றிதழ் கேட்டு ஜெயலட்சுமி விண்ணப்பிக்கும் போது பணியில் இருந்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தற்போதைய வருவாய் கோட்டாட்சியர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விண்ணப்பிக்கும் போது பணியில் இருந்த வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழிக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.