பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நியாயமற்றது என்றும்; அதை மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், "இந்து மதம் என்ற ஒன்று தோன்றவே இல்லை. அப்படி உருவாகவேயில்லை. இது பிற்காலத்தில் உருவானது. சைவம், வைணவம் என்றுதான் இருந்தன.
நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் ராமர் வைணவர். அப்படியென்றால் ராமரால் வதம் செய்யப்பட்ட ராவணன் சைவத்தைச் சார்ந்தவர். அந்த சைவத்தைச் சேர்ந்த ராவணன் எங்கள் தமிழன். இலங்கையைச் சேர்ந்தவர். தமிழ்ச் சமூகத்தின் தலைவன். சங்கம் வைத்து தமிழை வளர்த்தவர். அப்படியென்றால் நாங்கள் ராவணனின் வாரிசுகள்.
ராமாயணம் என்பதே ராமருக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த யுத்தத்தை விவரிப்பது தான். அது வைணவத்துக்கும் சைவத்துக்கும் இடையே நடந்த யுத்தம் என்று இன்னொரு உருவகத்தை காட்டுகிறது. ராவணன் வீழ்த்தப்பட்டார் என்றால் சைவம் வீழ்த்தப்பட்டது. இதன்பிறகு சைவம், வைணவம் உள்ளிட்ட ஆறு, ஏழு மதங்கள் ஒன்று சேர்ந்து ஆதிசங்கரர் காலத்தில்தான் குறிப்பிட்ட அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கின்ற நிலை உருவானது.