தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது நாள்களாக ஊரடங்கு நடைமுறையிலிருந்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்படைந்துள்ளனர். தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை.
தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும், கரோனா அச்சம் காரணமாக எந்தப் பெரிய சிறிய நிறுவனங்களும் இயங்க முன்வரவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையில் அரசு குழு ஒன்றை அமைத்தது. அக்குழு இன்று தனது முதல் கூட்டத்தை கூட்டி ஆலோசனையில் ஈடுபட்டது.
இதில், குழுவிற்கு உதவுவதற்காக ஐஏஎஸ் அலுவலர்களைக் கொண்ட துணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கராஜன், ”இது முதல் கூட்டம் என்பதால் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. பொருளாதார மேம்பாட்டுக்கு உடனே செய்யவேண்டியவை, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு செய்ய வேண்டியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.