சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று (அக். 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் 75-க்கும் மேற்பட்ட படகுகளில் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
கோடியக்கரை பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேரை கைது செய்தனர். அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல் கண்டிக்கத்தக்கதாகும்.
இலங்கையின் அத்துமீறலும், அராஜகமும்
தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரும் கோடியக்கரை பகுதியில் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கைப்படையினர், தமிழ்நாடு மீனவர்களை கைது செய்து அவர்கள் இலங்கை எல்லையில் உள்ள நெடுந்தீவு கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்தபோது கைதுசெய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். சிங்கள கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
நாகப்பட்டினம் மாவட்டத்தையொட்டிய பகுதியில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பே வெகு சில கிலோ மீட்டர்கள்தான். சர்வதேச கடல் எல்லையைக் கூட வரையறுக்க முடியாத அளவுக்கு அப்பகுதியில் கடற்பரப்பு குறுகியதாக உள்ளது. அதனால், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதும், தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைவதும் இயல்பானதுதான்.