இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் துணையாக செயல்பட்டு வரும் முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் பதிவு, புதுப்பித்தல் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கும் அதிகாரங்களை ஒன்றிய அரசு ரத்து செய்திருக்கிறது.
10 லட்சம் வேலைவாய்ப்புகள்
அடுத்தக்கட்டமாக அந்த அமைப்பையே கலைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதுவும் நடந்து விட்டால் தமிழ்நாட்டில் முந்திரி ஏற்றுமதி பேரழிவை சந்திக்கும். இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் அந்நிய செலாவணியை பெற்றுத் தருவதுடன், 10 லட்சத்திற்கும் கூடுதலான வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுப்பது முந்திரி சாகுபடியும், ஏற்றுமதியும்தான்.
குழுவின் முக்கியத்துவம்
இந்தியாவில் உள்ள முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு இந்த விஷயத்தில் பெரும் துணையாக திகழ்ந்து வருவது கேரள மாநிலம் கொல்லத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு ஆகும்.
இந்தியாவிலிருந்து முந்திரிப் பருப்பு, முந்திரிக் கொட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் உள்ளிட்ட துணைப் பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புபவர்களுக்கும், அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு வருவது இந்த அமைப்பு தான்.
இந்தியாவிலிருந்து முந்திரி, அதன் துணைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்த அமைப்பில் உறுப்பினராக வேண்டியது அவசியமாகும். உறுப்பினராக பதிவு செய்வதுடன், அது காலாவதியாவுடன் புதுப்பித்து அதற்கான சான்றிதழ்களை வைத்திருந்தால்தான் ஒன்றிய அரசு வழங்கும் ஏற்றுமதிக்கான பல்வேறு சலுகைகளை ஏற்றுமதியாளர்கள் பெற முடியும்.
மாறும் அதிகாரம்
ஆனால், முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவில் உறுப்பினராக பதிவு செய்தல், புதுப்பித்தல், அவற்றுக்கான சான்றிதழ் வழங்கும் அதிகாரம் முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவிடமிருந்து பறிக்கப்பட்டு வேளாண்மை மற்றும் பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் (Agricultural and Processed Food Products Export Development Authority) ஒப்படைக்கப்பட்டு விட்டது.
அடுத்தக்கட்டமாக முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு மூடப்படவுள்ளது. இது முந்திரி ஏற்றுமதி வளர்ச்சியை சிதைத்துவிடும். இந்த முடிவு திரும்பப் பெறப்பட வேண்டும். முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவுடன் ஒப்பிடும் போது வேளாண்மை மற்றும் பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் கூடுதல் அதிகாரம் கொண்ட, பெரிய அமைப்பு ஆகும்.
சரியும் முந்திரி ஏற்றுமதி
அந்த ஆணையத்தின் தலைவராக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்தான். ஆனாலும், அந்த அமைப்பால் முந்திரி ஏற்றுமதிக்கு எந்த உதவியும் செய்ய இயலாது. ஏனெனில், வேளாண்மை மற்றும் பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் விளைபொருட்கள் மற்றும் பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உதவிகளை செய்து வருகிறது.