சென்னை:தமிழ்நாடு நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு நடைப் பயிற்சி சென்றபோது கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க காவல்துறை எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலன் விசாரணைக்குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த சிறப்பு புலன் விசாரணைக்குழு சந்தேகப்படும் நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்காக அழைத்துச்செல்லும் நபர்களை சிறப்பு புலன் விசாரணைக்குழு பல்வேறு வகையில் துன்புறுத்துவதாக, சிறைக்கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக்குழு, நள்ளிரவு நேரங்களில் பலரை விசாரணைக்காக அழைத்துச்சென்று காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக அடைத்து வைப்பதாகவும், குற்ற வழக்கு விசாரணையில் போலீசார் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி சிறப்பு புலன் விசாரணைக்குழுவினர் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக்குழு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா? என்பதை கண்காணித்து மனித உரிமை மீறலைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலன் விசாரணைக்குழுவினர் அத்துமீறலில் ஈடுபடுவதாகப்புகார் - Ramajayam murder case
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக் குழுவினர், விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்துவதாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Ramajayam murder case and Special Investigation Team alleged to be involved in cruelty