தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி பாமகவுக்கு கிடைத்த வெற்றி: முதலமைச்சருக்கு ராமதாஸ் நன்றி! - உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி பாமகவுக்கு கிடைத்த வெற்றி

சென்னை: உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் தள்ளுபடி அறிவித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Ramadoss welcomes CM decision on farmers' crop loan waiver
Ramadoss welcomes CM decision on farmers' crop loan waiver

By

Published : Feb 5, 2021, 3:35 PM IST

இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளிலிருந்து 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி மதிப்புள்ள பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். உழவர்களின் துயரங்களைத் துடைக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப். 5) 110 விதியின் கீழ் உழவர்களின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார். இது சரியான நேரத்தில் செய்யப்பட்ட சரியான நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பருவம் தவறி பெய்த மழைகளில் காவிரி பாசன மாவட்டங்கள், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது என்ற நிலை நிலவி வந்த சூழலில்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளின் பொருளாதார நெருக்கடிகளை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு தீர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். பருவம் தவறி பெய்த மழையால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ‘‘அனைத்தையும் இழந்த விவசாயிகள்: பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 15ஆம் நாள் உழவர் திருநாளில் மிகவும் விரிவாக அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அண்மைக்காலங்களில் உழவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஒரே அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி முதன்மைக் காரணமாக இருந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. உழவர்களின் நலனுக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம்

ABOUT THE AUTHOR

...view details