இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம், கவுத்தி மலையில் உருவாகும் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே கீரனூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு சென்று திருவண்ணாமலை மாவட்டத்தின் 14 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தின் 22 ஏரிகள் என மொத்தம் 36 ஏரிகளை நிரப்பி, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தித் தந்ததுதான், நந்தன் காலவாய் திட்டம்.
இத்திட்டத்தின் ஆதாரமாக திகழ்ந்த கீரனூர் அணை 200 ஆண்டுகளுக்கு முன்பே உடைந்துவிட்ட நிலையில், காலப்போக்கில் கால்வாய்களும் சீரழிந்து விட்டன. அணையையும், கால்வாய்களையும் சீரமைத்து நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டாலும் கூட, கடந்த 80 ஆண்டுகளாக அவற்றுக்கு செயல் வடிவம் கொடுக்கப்படவில்லை.
நந்தன் கால்வாய்த் திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டால் திருவண்ணாமலை - விழுப்புரம் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அவ்வாறு பாசன வசதி பெற்றால் அப்பகுதியிலுள்ள உழவர்களின் வாழ்வாதாரம் உயரும். அது இரு மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும்.