இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தி தான் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் சூழலில் இத்தேர்வுகளை நடத்த வேண்டுமா? என்பது தான் இப்போதைய வினா. சென்னையில் நேற்று வரை 22,149 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 31,667 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
பொதுத்தேர்வு என்ற பெயரில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்களை ஐந்து நாட்களுக்கு தேர்வு மையங்களில் ஒன்று திரட்டுவது மிகவும் ஆபத்தானதாகும். அவர்களுடன் நிறுத்தப்பட்ட ஒரு தேர்வுக்காக 8.32 லட்சம் 11 ஆம் வகுப்புக்கு மாணவர்களையும், 12ஆம் வகுப்பில் எழுதத் தவறிய கடைசி தேர்வை எழுத சுமார் 35 மாணவர்களையும் குவிய வைப்பது நோயை விலை கொடுத்து வாங்கும் செயலாகவே அமையும். மாணவர்களின் உயிர்களுடன் விளையாடக் கூடாது.
அரசுத் தேர்வுத்துறையில் இணை இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் கரோனா எவ்வளவு ஆபத்தானது? அது எவ்வளவு வேகமாக பரவும் என்பது குறித்தெல்லாம் மற்றவர்களை விட தேர்வுத்துறையினருக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தும் தேர்வுகளை நடத்துவதில் பிடிவாதம் காட்டக்கூடாது.