இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசின் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக, 2012ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்திற்கு 3 அரை நாள்கள் மட்டும் பணியாற்றினாலே போதுமானது. இதற்காக இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்பட்டுவந்தது.
பின்னர் 2014ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால், பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.7,700 ஆக உயர்த்தப்பட்டது. ஆனாலும், எட்டு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களின் பணி நிலைப்பு கோரிக்கை மட்டும், இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் செங்கோட்டையனின் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.