இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் 3 ஆண்டுகள் தாமதமாக கடந்த ஆண்டு தான் நடத்தப்பட்டன. அதிலும் கூட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள், சென்னை தவிர்த்து 27 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்கள் மட்டும் தான் நடத்தப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட, அதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்காததால் அங்கு எந்த வேலையும் நடக்கவில்லை.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரிய அளவில் வரி விதிக்கும் அதிகாரம் இல்லை என்பதால், அவற்றுக்கான நிதித்தேவையில் 70 விழுக்காட்டை மத்திய அரசும், 30 விழுக்காட்டை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மாதங்களில் எந்த அளவுக்கு நிதி கிடைத்திருக்க வேண்டுமோ? அதில் பத்தில் ஒரு பங்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதற்கான முயற்சியை கூட அரசுகள் மேற்கொள்ளவில்லை.