இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் புகழ்பெற்ற தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே ஒருமைப் பல்கலைக்கழகங்களாக இருப்பது தான் அவற்றின் வெற்றிக்கும், புதிய ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கும் காரணம் ஆகும். அந்த வகையில், புகழ்பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாகவும், இணைப்பு பல்கலைக்கழகமாகவும் திகழும் அண்ணா பல்கலைக்கழகம் ஒருமைப் பல்கலைக்கழகமாகவும், பிற பொறியியல் கல்லூரிகளை ஆளுமை செய்யும் இணைப்புப் பல்கலைக்கழகமாகவும் பிரிக்கப்படுவது முற்போக்கு நடவடிக்கை ஆகும்.
ஆனால், பிரிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு பெயர் வைப்பதில் நடக்கும் குளறுபடிகள் தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக ஒரு பல்கலைக்கழகம் பிரிக்கப்படும் போது, மூலப் பல்கலைக்கழகத்திற்கு அதன் பெயரை அப்படியே வைத்து விட்டு, பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு புதிய பெயர் சூட்டுவது தான் வழக்கமாகும். ஆனால், இங்கு பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்து விட்டு, இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்புக்கு அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படவிருப்பது தான் கொந்தளிப்புக்கு காரணமாகும்.