தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மதுக்கடைகளை மூடக்கோரி பாமக சார்பில் போராட்டம்' - ராமதாஸ் அறிவிப்பு

மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து வரும் 17ஆம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்

By

Published : Jun 15, 2021, 2:17 PM IST

சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்கள் நலனுக்கான அரசு அல்ல... மது ஆலைகளின் நலனுக்கான அரசு தான் என்பது நேற்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களின் குடும்பங்களில் மீதமுள்ள உடமைகளையும் பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது மன்னிக்கவே முடியாததாகும்.

மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்

உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் மக்களை இரு வழிகளில் மிக மோசமாக சூறையாடியிருக்கிறது. முதலாவது மனிதர்களைத் தாக்கி நோய்வாய்ப்படுத்துவதன் மூலமான உடல்நலத் தாக்குதல்; அடுத்தது மனிதர்களுக்கான வாழ்வாதாரங்களை முடிந்தவரை அழித்து வாழ முடியாமல் முடக்குவது ஆகும்.

இந்த இரு வகை தாக்குதல்களையும் இன்னும் கொடூரமாக்கும் வலிமை மதுவுக்கு உண்டு. அதனால், குறைந்தபட்சம் கரோனாவின் பிடியிலிருந்து தமிழ்நாடு மீளும் வரையிலாவது மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் பலமுறை வலியுறுத்தியும் கூட, அவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறந்து மிகப்பெரிய தீங்கை இழைத்திருக்கிறது திமுக அரசு.

காற்றில் பறந்த பாதுகாப்பு விதிகள்

மதுக்கடைகளை திறந்திருப்பது குடும்பங்களையும் சீரழிக்கப் போகிறது.... கரோனாவையும் பரப்பப் போகிறது என்பது முதல் நாள் நிகழ்வுகளிலிருந்தே உறுதியாகி விட்டது. மதுக்கடைகளில் ஒரு நேரத்தில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்;

பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், மதுக்கடைகள் திறக்கப்பட்ட அடுத்த நிமிடமே பாதுகாப்பு விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கத் தொடங்கி விட்டன.

ராமதாஸ்

மது வாங்க வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் முகக்கவசம் அணியவில்லை; அணிந்திருந்த சிலரும் கூட வாய்க்கும், தாடைக்கும் தான் முகக்கவசம் அணிந்து இருந்தனர்... மூக்குக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தனர்.

மது வாங்க வந்திருந்த எவருக்கும் கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்படவில்லை. மதுக்கடைகள் கரோனா மையங்களாக மாறுவதற்கு இந்த காரணங்களே போதுமானவை. ஆனால், அதைப் பற்றி அரசும், அதிகாரிகளும் கவலைப்படவில்லை.

நியாயமான சமூகக் காரணம் கிடையாது

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பதற்காக முதலமைச்சர் பல்வேறு காரணங்களைக் கூறியிருக்கிறார். கரோனா குறைந்து விட்டதால் தான் மதுக்கடைகளை திறக்கிறோம் என்று முதல் நாள் கூறுகிறார்; கள்ள மது விற்பனையைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அடுத்த நாள் தெரிவிக்கிறார்.

இவை எதுவுமே உண்மை இல்லை என்பது அவரது மனசாட்சிக்கே தெரியும். அவர் கூறும் காரணங்கள் உண்மை இல்லை என்பதால் தான் முதலமைச்சரின் வார்த்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது. மதுக்கடைகளை திறக்க ஆயிரமாயிரம் பொருளாதார, வணிகக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், மதுக்கடைகளைத் திறக்க ஒரே ஒரு நியாயமான சமூகக் காரணம் கூட கிடையாது.

அதனால் தான் மக்களின் நலன் கருதியும், கரோனா பரவலைத் தடுப்பதற்காகவும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை மறுநாள் (17.06.2021) வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மாநிலம் தழுவிய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களும், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளும் தங்களின் வீட்டு வாசலில், கரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, 5 பேருக்கு மிகாமல் கூடி, மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், கறுப்புக் கொடியையும் ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்துவர். பாட்டாளி மக்கள் கட்சியினரும், மதுவுக்கு எதிரானவர்களும் வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பான சூழலில் இந்த போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details