தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்டுப்புழுவியல் படிப்பை நிறுத்தக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

பட்டுப்புழுவியல் படிப்பை நிறுத்தக்கூடாது எனவும் இதுகுறித்து முதலமைச்சர் பேசி சிக்கலை தீர்க்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பட்டுப்புழுவியல் மாணவர்களுக்காக அறிக்கை வெளியிட்ட ராமதாஸ்
பட்டுப்புழுவியல் மாணவர்களுக்காக அறிக்கை வெளியிட்ட ராமதாஸ்

By

Published : Sep 13, 2021, 10:50 AM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் கற்பிக்கப்பட்டுவரும் பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பை நிறுத்தி வைப்பதாக கோவை வேளாண் பல்கலைக் கழகம் அறிவித்திருப்பதை எதிர்த்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

படிக்க வேண்டிய மாணவர்களை போராடும் சூழலுக்கு வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகம் தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

எந்தக் காரணமும் உண்மையல்ல

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டுப்புழுவியல் பாடத்தில் நான்காண்டு இளநிலை அறிவியல் (BSc - Sericulture) பட்டப்படிப்பு 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இருந்த இந்தப் பட்டப்படிப்பு, பின்னர் 2014ஆம் ஆண்டில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வனவியல் கல்லூரி, ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டது.

அங்கு பட்டுப்புழுவியல் படிப்புக்குத் தேவையான பட்டுப்புழு வளர்ப்புக் கூடங்கள், மல்பெரி செடி தோட்டம், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால், பட்டுப்புழுவியல் படிப்புக்கு மாணவர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அப்படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பட்டுப்புழுவியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

மாணவர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ள ஒரு படிப்பை வேளாண் பல்கலைக்கழகம் எந்த அடிப்படையில் தன்னிச்சையாக நிறுத்தியது என்று தெரியவில்லை. இதற்காக பல்கலைக்கழகத் தரப்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக இல்லை.

நிர்வாக வசதிக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் பட்டுப்புழுவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டிருப்பதாக ஒருபுறம் பல்கலைக்கழக நிர்வாகம் தகவல்களை பரப்புகிறது. ஆனால், மறுபுறம் பட்டுப்புழுவியல் படிப்புகளை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏற்ற சூழல் மேட்டுப்பாளையத்தில் இல்லை என்றும் பல்கலைக்கழகம் தரப்பில் கூறுப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் தரப்பில் கூறப்படும் எந்தக் காரணமும் உண்மையல்ல என்பது தான் உண்மை. பட்டுப்புழுவியல் படிப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதற்குத் தேவையான பட்டுப்புழுக்கள் மேட்டுப்பாளையத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களை முட்டாள்கள் ஆக்கும் செயல்

இவ்வளவு நாள் பட்டுப்புழு வளர்ப்பில் எந்த சிக்கலும் இல்லாத நிலையில், இப்போது திடீரென பட்டுப்புழு வளர்ப்பு மீது பழியைப் போட்டு அதற்கான படிப்புக்கு மூடுவிழா நடத்துவது எந்தவகையிலும் நியாயமல்ல.

அதேபோல், பட்டுப்புழுவியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் தவறாகும். வனவியல் கல்லூரியில் பட்டுப்புழுவியல் படிப்பை படித்துமுடித்த பலரும் தமிழ்நாடு அரசின் பட்டு வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகின்றனர்.

பட்டுப்புழு சார்ந்த தனியார் நிறுவனங்களிலும் பலர் பணியாற்றுகின்றனர். பலருக்கு அடுத்த அரசு வேலை கிடைத்துள்ளது. இது வேறு எந்தப் படிப்பிலும் கிடைக்காத வாய்ப்பு ஆகும். அவ்வாறு இருக்கும்போது பட்டுப்புழுவியல் படித்தால் வேலைவாய்ப்பு இல்லை என்று கூறி அப்படிப்பை முடக்குவது மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

தமிழ்நாட்டில் எந்தப் படிப்பும் நிர்வாகக் காரணங்களுக்காக இதுவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதில்லை. பட்டுப்புழுவியல் படிப்பை நிறுத்திவைக்க நியாயமான காரணங்கள் இல்லாதபோது, அப்படிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பல்கலைக்கழகம் கூறுவதும் மாணவர்களை முட்டாள்கள் ஆக்கும் செயலாகும்.

தீர்வு காணப்பட வேண்டும்

பட்டுப்புழுவியல் படிப்புக்கான பாடத்திட்டத்தில் பட்டுப்புழுவை வளர்ப்பது மட்டுமின்றி, பட்டு நூல் தயாரித்தல், சந்தைப் படுத்துதல் ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவை அரசு-தனியார் வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, மிகப்பெரிய அளவில் சுயவேலைவாய்ப்புகளையும் வழங்கக்கூடியவை. இத்தகைய சிறப்புமிக்க பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு முடக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

பட்டுப்புழுவியல் படிப்பு முடக்கப்படுவதைக் கண்டித்து வனவியல் கல்லூரியில் அப்படிப்பை படித்துவரும் மாணவர்கள் கடந்த ஐந்து நாள்களாக அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் வேளாண் பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய பேச்சுகள் தோல்வியடைந்து விட்டன.

அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு எதிரான அடக்கு முறையை பல்கலைக்கழகம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது பெரும் சிக்கலாக வெடிப்பதற்குமுன் தீர்வு காணப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரும், வேளாண் அமைச்சரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'நீட் தேர்வு விலக்கு: சட்டப்பேரவையில் இன்று புதிய மசோதா'

ABOUT THE AUTHOR

...view details