சென்னை: எம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழ்நாடு மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "எம்பிபிஎஸ் படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் அதிகாரம் தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாலும், அந்த இடங்களை யாரைக் கொண்டு வேண்டுமானாலும் நிரப்பலாம் என்பதாலும், அவை பிற மாநில மாணவர்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,905 இடங்களில், 1,165 அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ளவற்றில் 520 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும், 220 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 520 இடங்களில், சுமார் 370 இடங்கள் பிற மாநில மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.
அதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 370 மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இது பெரும் சமூக அநீதியாகும். தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தமிழ்நாடு அரசு கலந்தாய்வு மூலமாகவே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.