சீனாவில் வூஹான் மாகாணத்தில் தோன்றியதாகக் கூறப்படும் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) உலகின் பல்வேறு மூலைகளுக்கும் பரவி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியதாகக் கூறப்படும், இந்த வைரஸால் இதுவரை 3,500க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒவ்வொரு நாடும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், வைரஸின் தீவிரத்தன்மையால் மிக எளிதாக அடுத்தடுத்த நாடுகளுக்குப் பரவுகிறது. இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டிருந்த போதிலும் கொரோனாவின் தாக்குதல் இங்கும் தற்போது ஆரம்பித்திருக்கிறது.
இந்தச் சூழலில் , மத்திய சுகாதாரத் துறை மிக முக்கியமான விழிப்புணர்வு நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி, ஒருவரை நாம் தொலைபேசியில் தொடர்புகொள்ளும்போது, கொரோனாவிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாக்கச் செய்யவேண்டிய முறைகள் குறித்து விழிப்புணர்வு குரல் ஒன்று பேசுகிறது.
வோடாபோன், ஏர்டெல், ஜியோ என அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்தத் தகவலை மக்களுக்கு வழங்கி வருகின்றன. இருமும் சத்தத்துடன் பேசத் தொடங்கும் அந்தக் குரலில், இருமல், தும்மல் ஆகியவை வந்தால் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும் எனவும், கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் எனவும் கூறுகிறது.
காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து 1 மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும் எனவும், இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அருகிலுள்ள சுகாதார மையத்தை அணுகுங்கள் எனவும் அக்குரல் வலியுறுத்துகிறது. மேலும், 01123978046 என்ற உதவி எண்ணுக்கு அழைக்குமாறும் தெரிவிக்கிறது.
சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கை அனைவரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றாலும், அந்தக் குரல் மிக விரைவாகவும், ஆங்கிலத்திலும் பேசுவது மக்கள் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது என்ற விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக மக்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய அரசின் இந்த விழிப்புணர்வை தான் வரவேற்பதாகவும், அதனை அந்தந்த மாநில மக்களின் மொழிகளில் கொடுத்தால் நிறைய மக்களுக்கு சென்று சேரும் எனவும் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸின் ட்விட்டர் பதிவில், 'கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியைப் பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாகப் பயனளிக்காது. அதனால் மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கொரோனா அச்சுறுத்தல்: பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் ரத்து