தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈழ படுகொலை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்! - ராமதாஸ் வலியுறுத்தல் - இலங்கை இனப்படுகொலை

சென்னை: "ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலையின் 10 ஆவது நினைவுநாளில், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதே சிறந்த வீரவணக்கமாக இருக்கும்" என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Ramadoss

By

Published : May 14, 2019, 7:50 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

இலங்கையில் உரிமைக்காக போராடிய ஒன்றரை லட்சம் தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்ததன் பத்தாம் ஆண்டு நினைவு நாள் வரும் 17,18 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகளாகியும், இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

பத்தாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் அப்பாவித் தமிழர்களை துப்பாக்கி குண்டுகள், ஏவுகணைகள் மட்டுமின்றி, தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளையும் வீசி கொன்றொழிக்கும் சதியில் இலங்கை அரசு தீவிரம் காட்டியது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக அனைத்து தமிழர்களையும் அழித்து விட வேண்டும் என்று வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்தது இராஜபக்சே தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு.

‘‘தொப்புள்கொடி உறவுகளான எங்களைக் காப்பாற்றுங்கள்’’ என்று ஈழத்தில் இருந்து தமிழகத் தலைவர்களுக்கு வேண்டுகோள்கள் வந்து கொண்டிருந்தன. ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று என்னைப் போன்ற தலைவர்களும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினோம். ஆனால், சொந்தங்களைக் காப்பாற்றுவதை விட அதிகாரத்தை அனுபவிப்பதுதான் ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல்கள் உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டன. பல லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் கொத்தடிமைகளை விட மிகவும் மோசமான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தமிழர்களுக்கு நீதியை வாங்கி கொடுக்காமல், மத்திய அரசில் தங்களுக்கான துறைகளை வழங்க வேண்டும்; இல்லாவிடில் அமைச்சரவையில் சேர மாட்டோம் என்று மிரட்டிக் கொண்டிருந்தனர் தமிழக ஆட்சியாளர்கள். மாறாக, 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாமக தோல்வி அடைந்தாலும், ஈழச் சொந்தங்களுக்கு நீதியை பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக இலங்கை அரசு மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் வலியுறுத்தியது. இதுவரையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பசுமைத் தாயகம் அமைப்பு மேற்கொண்ட முன்னெடுப்புகளாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவாலும் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆனாலும், திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இராஜபக்சேவை வணங்கி, பரிசுப்பெட்டிகளை வாங்கி வந்ததையும், ஐ.நா.வின் பொதுச்செயலாளரை சந்திப்பதாகச் சென்று அதன் வாயிற் காப்போனிடம் மனு கொடுத்து வந்ததையும் தவிர துரும்பைக் கூட அசைக்கவில்லை. இலங்கை போர்க்குற்றங்கள் மீதான நீதி விசாரணைகள் குறித்து கடந்த மார்ச் மாதம் விவாதித்த ஐ.நா மனித உரிமைப் பேரவை, அடுத்த இரு ஆண்டுகளில் நீதி விசாரணையை முடித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஆனால், அதன்பின்னர் இரு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அதற்கான நடவடிக்கைகள் எதையும் சிங்களப் பேரினவாத அரசு மேற்கொள்ளவில்லை. இனி வரும் காலங்களிலும் சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.

இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை அடுத்தடுத்தக் கட்டங்களைக் கடந்து ‘தி ஹேக்’ நகரில் உள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஐ.நா மனித உரிமை ஆணைய விசாரணைக் குழுவினர் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இராஜபக்சே சகோதரர்கள், சரத் பொன்சேகா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஈழ தமிழர்களின் தந்தை நாடான இந்தியா மேற்கொள்ள வேண்டும். அதுதான் சிங்கள வெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு, பத்தாவது நினைவு நாளில் செலுத்தப்படும் சிறப்பான வீரவணக்கமாக அமையும்” என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details