முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், 14 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்யாவிட்டாலும், மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பான சிக்கலில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.
விடுதலை
ஹரியானாவைச் சேர்ந்த வாழ்நாள் சிறைத் தண்டனை கைதி ஒருவரை, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகள் சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்க வகை செய்கின்றன.
அந்தப் பிரிவுகளின்படி செய்ய முடியாத தண்டனைக் குறைப்பைகூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி, மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று செய்வதற்கு ஆளுநர்களுக்கு அதிகாரம் உண்டு என்பது தான் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மையக்கரு ஆகும்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்காக தமிழ்நாடு அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது முடிவெடுக்க முடியவில்லை என்று கூறி, அதை குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தப் புதிய வழிகாட்டுதல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ஆளுநர் அதிகாரம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி விடுதலை செய்ய மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.