முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குண்டு வெடிப்பில் பலியான காவலர்களின் குடும்பங்கள் சார்பில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேருக்கு எதிரான மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்
2019-05-09 10:58:15
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு எதிராக, குண்டு வெடிப்பில் பலியான காவலர்களின் குடும்பங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குண்டு வெடிப்பில் இறந்த காவலர் மகன், காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாரயணன் உட்பட 9 பேர் தாக்கல் செய்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமாக இருந்த பேரறிவாளன், நளினி உட்பட எழுவரை விடுதலை செய்யக் கூடாது என்று வாதிடப்பட்டது.
இதனைக் கேட்ட தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான எழுவர் வழக்கு தற்போது இறுதிகட்டத்தில் உள்ள நிலையில், இனி அது சம்பந்தமாக எந்த ஒரு மனுவையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இந்த ஏழு பேர் விடுதலையை தமிழ்நாடு அரசுக்கு, ஆளுநர் பன்வாரிலால்தான் அதை பரிந்துரைக்க வேண்டும் என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.