தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விஜயகாந்தால் செய்யமுடியாததை ரஜினியால் செய்ய முடியுமா? - ஒருவிரல் புரட்சி ஆன்மிக ஆட்சிக்கு வித்திடுமா? - Rajinikanth political entry news

கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு எட்டு விழுக்காடு வாக்குகளைப் பெற்ற விஜயகாந்த் கட்சியால் இறுதிவரை அதிமுக, திமுக இடத்தைப் பிடிக்க முடியாத நிலையில், நடிகர் ரஜினிகாந்தால் அதைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜயகாந்தால் செய்யமுடியாததை ரஜினிகாந்தால் செய்யமுடியுமா?
விஜயகாந்தால் செய்யமுடியாததை ரஜினிகாந்தால் செய்யமுடியுமா?

By

Published : Dec 11, 2020, 11:48 AM IST

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியாகத் தெரிவித்திருப்பது தமிழ்நாடு மட்டுமின்று தேசிய அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா, இப்போ வருவார், அப்போ வருவார் என்று பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே தற்போது உறுதிபட ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் பட்டாளம், மக்களிடையே ஈர்ப்பு இருந்தாலும் அவர் அரசியலில் வெற்றி அடைவதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக விஜயகாந்தின் அரசியல் வருகையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

விஜயகாந்த் அரசியல் வரவு எப்படி?

விஜயகாந்த்

தமிழ்நாட்டின் பிரபலமான நடிகர் விஜயகாந்த் 2005இல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற கட்சியைத் தொடங்கி அடுத்த ஆண்டே (2006) சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 8.38 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். இதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் 10 விழுக்காடு வாக்குகளுக்கு மேல் பெற்று அதிமுக, திமுக கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தார்.

விஜயகாந்தின் வளர்ச்சியை உணர்ந்து அதிமுக 2011இல் தேமுதிக கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அந்தத் தேர்தலில் (2011) 41 தொகுதிகளில் போட்டியிட்டு 7.88 விழுக்காடு வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது தேமுதிக. பிறகு விஜயகாந்தின் உடல்நலக் குறைவால் தற்போதுவரை தேமுதிக சரிவை சந்தித்துவருகின்றது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக வெறும் 2.3 விழுக்காடு வாக்குகளையே பெற முடிந்தது. அமைப்பு ரீதியாக தனது ரசிகர் மன்றத்தை நடிகர் விஜயகாந்த் கட்டமைத்து கட்சியாகத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் உழைத்தும், அவரால் எதிர்க்கட்சியாக உருவெடுக்க முடிந்தது. உச்சத்தில் தொடங்கிய தேமுதிக சரிவில் முடிந்துள்ளது.

ரஜினிகாந்த் அரசியல் வியூகம் எடுபடுமா?

ரஜினிகாந்த்
இந்நிலையில், இன்னும் சரியாக நான்கு மாதங்களே சட்டப்பேரவைத் தேர்தல் இருக்கும்பட்சத்தில், நடிகர் ரஜினிகாந்த் இனி கட்சி தொடங்கி எந்த அளவு வாக்குகளைப் பெற முடியும் என்றால் அவருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்துக்காட்டாக இருப்பார்.
இந்த இடத்தில் கூடுதலான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் விஜயகாந்த் எதிர்ப்பு அரசியல் நடத்தியது மாபெரும் ஜாம்பவான்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து. ஆனால் தற்போது ஒரு ஈர்ப்பு சக்தியுள்ள (Charismatic) தலைவர்கள் இல்லை என்பதே கள யதார்த்தம். இது ரஜினிக்கு கூடுதல் பலம்.
அதேபோல், விஜயகாந்தின் கட்சி எப்போதிலிருந்து சரிவைச் சந்தித்தது என்று கூர்நோக்குகையில், அவரது உடல்நிலையில் தொடர்ந்து பாதிப்பு, சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய எதிர்மறையான மீம்ஸ்கள், விமர்சனங்கள் ஆகிய காரணிகளால் தேமுதிக பலவீனமடைந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

விஜயகாந்தை ஒப்பிடும் போது ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் அதிகம், மக்கள் ஈர்ப்பு அதிகம் என்று பார்த்தாலும் அதை அவரால் வாக்காக மற்ற முடியுமா என்றால் தேர்தலில் அவர் களமாடுவதைப் பொறுத்தும் மக்களின் அபிமானமும்தான் முடிவுசெய்யும்.

தேசியம், திராவிடம் கலந்து கட்சி தொடங்கிய விஜயகாந்த் சறுக்கிய நிலையில், ஆன்மிகம் என கூறும் ரஜினிகாந்த் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

திமுக, அதிமுக அமைப்பு ரீதியாக மிகவும் வலுவாக தமிழ்நாட்டி மாறி, மாறி ஆட்சி செய்துவரும் கட்சிகள். தமிழ்நாடு மக்களுடன் பிணைத்துகொண்டு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துவரும் கட்சிகள் இடையே புதிதாக கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அரசியல் பயணத்தை கூர்ந்து கவனித்து சரியான வியூகம் அமைத்துச் செயல்பட்டால் வெற்றி வசமாகும். யார் எப்படி வியூகம் வகுத்தாலும் ஜனநாயகத்தின் எஜமானர்கள் மக்கள் கையில்தான் முடிவுள்ளது. அவர்களின் ஒருவிரல் புரட்சி அதிசயம் அற்புதத்தை நிகழ்த்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details