தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘எழுச்சி தெரியட்டும்; அப்போது வருகிறேன்’ - அரசியல் வருகை குறித்து ரஜினிகாந்த் பேச்சு

சென்னை: மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்த பின்னர், அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

rajini
rajini

By

Published : Mar 12, 2020, 2:22 PM IST

Updated : Mar 12, 2020, 10:33 PM IST

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், தனியார் ஓட்டல் ஒன்றில் இன்று காலை 10.30 மணியளவில் அவர் செய்தியாளர்கள் முன் பேசினார்.

அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது:

மாவட்ட செயலாளர்களை நான் சந்தித்தது தொடர்பாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் யூகத்தின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது குறித்து நானே தெளிவுபடுத்திவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

2017 டிசம்பர் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவேன் என்று முதலில் அறிவித்தபோது இங்கு சிஸ்டம் சரியில்லை என்றேன். ஒரு நல்ல ஆட்சியை வழங்க வேண்டும் என்றால் இங்கு முதலில் அரசியல் மாற்றம் வேண்டும். அதுதான் ஒரு நல்ல ஆட்சிக்கு வழிவகுக்கும்.

ரஜினிகாந்த் பேச்சு

அரசியல் மாற்றம் இல்லாத ஆட்சி மாற்றம் என்பது மீன் குழம்பு சமைத்த பாத்திரத்தைக் கழுவாமல், அதில் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றதாகும். ஆகவே, நான் விரும்பும் அரசியல் மாற்றத்திற்கு முக்கியமான மூன்று திட்டங்களை வைத்திருக்கிறேன்.

முதலாவது திட்டம் - கட்சிப் பதவி தொடர்பானது

  • இரண்டு மிகப்பெரிய கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கட்சிகளின் மாநில நிர்வாகிகள் தொடங்கி, ஊராட்சிகள் வரை 50,000-க்கும் மேற்பட்ட கட்சி பதவிகள் இருக்கின்றன. அவர்களின் எண்ணிக்கை மட்டும் 25 லட்சமாக இருக்கும். இவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சிக்கு ஏற்படும். இதனால் பெரிய அளவில் ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது.
  • கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பெற உதவுவார்களே தவிர, அதன்பின்னர் அவர்களால் அரசுக்கும், மக்களுக்கும் தொந்தரவுதான் அதிகம். ஆகவே, தேர்தல் முடிந்தவுடன் அத்தியாவசியமான பதவிகளை வைத்துக்கொண்டு, தேவையற்ற பதவிகளை நீக்க வேண்டும். இதுவே எனது முதல் திட்டம்.
    கட்சிப் பதவிகள் குறித்து ரஜினி பேச்சு

இரண்டாவது திட்டம் - இளைஞர்களுக்கு வாய்ப்பு

  • பொதுவாகவே சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் 50 வயதுக்கு மேற்பட்டோரே அதிகளவில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியே இருந்தாலும் அவர்கள் எம்.பி. மகனாகவோ அல்லது எம்எல்ஏ மகனாகவோதான் இருக்கின்றனர்.
  • படித்தவர்கள், இளைஞர்கள் அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கிவிடாமல், அரசியலில் ஆர்வமுடன் ஈடுபட முன்வர வேண்டும். அப்படி வரும் இளைஞர்களைத் தேர்வுசெய்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவேன். 60 லிருந்து 65 விழுக்காடு வரை இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவேன். அது தவிர மீதமுள்ள 35 முதல் 40 விழுக்காட்டினர், பிற கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ் அலுவலர்கள் போன்றோருக்கு வழங்குவேன்.
  • அப்படி வழங்கி அவர்களை சட்டப்பேரவைக்கு அனுப்பி அதிகார சூத்திரத்தை கையில் எடுத்துக்கொள்ள பாலமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடைவதற்கு கடந்த 45 வருடங்களாக நான் திரையுலகில் ஈட்டிய புகழ், தமிழ் மக்கள் என் மீது செலுத்திவரும் பேரன்பு, அவர்களுக்கு என் மீது இருக்கும் நம்பிக்கை அனைத்தும் உதவும் என்று நம்புகிறேன்.

மூன்றாவது திட்டம் - ‘கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை’

  • கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே தலைவர் என்று பார்த்து பழகிவிட்ட தமிழ்நாட்டு அரசியலில் கட்சியை நிர்வகிக்க ஒருவரும் ஆட்சியை நிர்வகிக்க ஒருவரும் என்ற வகையில் மாற்றம் தேவை. இரண்டுக்கும் ஒரே தலைவர் என்ற பட்சத்தில் ஆட்சியாளர்களைத் தட்டிக் கேட்க முடியாத நிலை உருவாகும். அதையும் மீறி தட்டிக் கேட்டால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் அல்லது தள்ளிவைக்கப்படுவார்கள்.
  • ஆட்சிக்கும் கட்சிக்கும் வெவ்வேறு தலைவர்கள் என்ற பட்சத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். கட்சி சார்ந்த விழாக்கள், திருமணம், காதணி போன்ற நிகழ்ச்சிகளில் ஆட்சியாளர்கள் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை.
  • ஆட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெற மக்கள் வளர்ச்சிப் பணியில் அனுபவம் வாய்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு ஆலோசனைக் குழு அமைத்து, அவர்கள் பரிந்துரைக்கும் ஆலோசனைகளை செயல்படுத்துவதைக் கட்சித் தலைமை உறுதிசெய்யும்.
  • முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. முதலமைச்சராக என்னை நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு 1996ஆம் ஆண்டிலேயே இது தெரியும். நான் கட்சித் தலைமை பொறுப்பை வகிப்பேன்.
  • எனது கட்சியிலிருந்து தேர்வாகும் நேர்மையும், திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற தன்னம்பிக்கையுள்ள படித்த சுயமரியாதையுள்ள ஒரு இளைஞரை (அவர் பெண்ணாகக் கூட இருக்கலாம்) முதலமைச்சர் பதவியில் அமரவைப்பேன்.
    ‘கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை’

ஆட்சி நிர்வாகத்தில் கட்சி தலையிடாது. அதே சமயத்தில் ஆட்சியாளர்கள் தவறுசெய்தால் சுட்டிக்காட்டுவோம். இதுதான் நான் விரும்பும் மாற்று அரசியல், உண்மையான ஜனநாயகம், என்னுடைய கனவு.

இதற்காகத்தான் நான் அரசியலுக்கு வருகிறேனே தவிர பெயருக்காகவோ, புகழுக்காகவோ வரவில்லை. எனது நோக்கத்தை தமிழ்நாடு மக்கள் புரிந்துகொண்டு இத்தகைய அரசியல் மாற்றத்திற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

வாழ்க தமிழ் மக்கள்! வாழ்க தமிழ் நாடு!! ஜெய்ஹிந்த்!!!

Last Updated : Mar 12, 2020, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details