முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாரின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில், 73% அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி, மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இரு வேறு தீர்ப்புகள்
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா, இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக, நீதிபதி எம்.நிர்மல் குமார் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான், ஏற்கெனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அது ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஏற்கெனவே ராஜா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மகேந்திரன் தொடர்ந்த வழக்கில், ஆரம்ப கட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் வாதிட்டார்.
முடித்து வைத்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது என்று கூறிய அவர், இந்த வழக்கின் தீர்ப்பில் ஒரு நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, மற்றொரு நீதிபதி பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் 2011-13ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இவர் சேர்த்த சொத்துகளை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், இந்த கால அவகாசத்தை 1996ஆம் ஆண்டில் கணக்கில் எடுக்க வேண்டும் என்று சுமார் 22 ஆண்டுகள் சேர்த்த சொத்துகளை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது தவறு என்றும் வாதிடப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை விதி கூறுவது என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி 7 ஆண்டுகளுக்குள் தான் காலக்கெடு இருக்க வேண்டும் என்றும், 22 ஆண்டுகள் இருக்கக் கூடாது எனவும், ஆரம்பகட்ட விசாரணை முறையாக நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக 10 விழுக்காட்டிற்கும் குறைவாக தான் சொத்து சேர்த்து இருப்பதால், அந்த வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் காவல் துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,
பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பேசி வாதிட்டார்.
'ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 விழுக்காடு அளவுக்கு சொத்துக்குவிப்பு'
16:46 September 03
அப்போது அவர், அரசின் உயர் பதவியில் அமைச்சராக இருந்து கொண்டு அனைத்து அரசு சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, தற்போது இந்த வழக்கை எதிர் கொள்ளத் தயங்குவதாக குறிப்பிட்டார்.
ஆரம்ப கட்டத்தில் 5 விழுக்காடு அளவுக்கு இருந்த சொத்துக்குவிப்பு, தற்போது காவல் துறையின் ஆரம்ப கட்ட விசாரணையில் 73 விழுக்காடு அளவிற்கு வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார். எனவே, அவர் மீதான சொத்துக்குவிப்பு புகார் வழக்குத் தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு ராஜேந்திர பாலாஜி தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்வானார் எம்.எம். அப்துல்லா