தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பெண்களின் திருமண வயது அதிகரிப்பு' - அரசியல் காழ்ப்புணர்ச்சி

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்படுவதாக சமூக சமத்துவதிற்கான மருத்துவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மருத்துவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டு
மருத்துவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டு

By

Published : Dec 22, 2021, 6:35 AM IST

சென்னை:பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவில் இந்துத்துவா சூழ்ச்சி உள்ளது எனவும், இஸ்லாமியர்களைக் குறிவைத்து இந்தச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளரிடையே பேசுகையில், “மத்திய அரசு கொண்டுவரவுள்ள பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்திவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். சட்டத்திற்குப் புறம்பான கருகலைப்பும், பாதுகாப்பற்ற கருகலைப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பேறுகால இறப்பு விகிதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. பெண்களின் திருமண வயதை சட்ட ரீதியாக அதிகரிப்பது ஆணாதிக்கத்தையே வலுப்படுத்தும். பெண்களின் சுய நிர்ணய உரிமைகளைப் பறிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதின் மூலம் பெண்களின் திருமண வயது அதிகரிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

சென்ற விடுதலை நாள் நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘மத்திய அரசு, நமது சகோதரிகள், மகள்களின் உடல்நலம் குறித்து தொடர்ச்சியாக அக்கறை செலுத்துகிறது. அவர்களை சத்துணவு குறைபாட்டிலிருந்து காப்பற்ற அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்வது அவசியம்’ என்று கூறினார்.

பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் வயது உயர்வது, பல்வேறு வகையிலும் பெண்களுக்கு நன்மை பயக்கும். ஆனால் சட்டத்தின் மூலம் திருமண வயதை உயர்த்தக் கூடாது. சட்ட ரீதியாகப் பெண்களின் திருமண வயதை மேலும் உயர்த்துவது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும்.

பெண்கள் மீதான ஆணாதிக்கத்தை வலுப்படுத்தும். தங்களது எதிர்காலத்தைத் தீர்மானித்துக் கொள்வதற்கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான, பெண்களின் சுய நிர்ணய உரிமையைப் பறித்துவிடும்.

ஊட்டச்சத்தை உறுதிசெய்தல், பேறுகாலத் தாய்மார்களின் இறப்புவிகிதத்தை குறைத்தல், பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைத்தல், அவர்களின் கல்வி வாய்ப்பை அதிகரித்தல், பெண்களின் அதிகாரத்தை வலுப்படுத்தல் என்ற போர்வையில், பெண்களின் உரிமைகளுக்கு எதிராக, மத்திய அரசு பெண்களின் திருமண வயதை சட்டம் மூலம் அதிகரிப்பது கண்டனத்திற்குரியது.

மருத்துவ ரீதியான காரணிகளை முன்வைத்து மதவாத – சாதிய சக்திகள், தங்களின் ஆணாதிக்க பண்பாட்டு, அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள பெண்களின் திருமண வயதைப் பயன்படுத்த முயல்வது ஏற்புடையதல்ல. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு முன்வைக்கும் வாதங்கள் உண்மைக்கு மாறானவை.

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்காக மத்திய அரசு கூறும் எந்தக் காரணங்களையும், பிரச்சினைகளையும், அவர்களின் திருமண வயதை சட்ட ரீதியாக உயர்த்துவதால் சரிசெய்ய இயலாது. பெண்களின் சட்ட ரீதியான திருமண வயது 1978இல் 16 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது.

இது நடைமுறைப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் ஏன் இன்று வரை 18 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளின் திருமணங்களை முற்றிலும் நிறுத்த முடியவில்லை?

பொதுவான சமூகப் பொருளாதார வளர்ச்சி - முன்னேற்றத்தின் காரணமாகவும், கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு வசதிகளாலும், இந்தியப் பெண்களின் சராசரி திருமண வயது படிப்படியாக உயர்ந்து, தற்போது 22.1 ஆக உள்ளது. இது 1961இல் வெறும் 15.7 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது பெண்களின் சராசரி திருமண வயது 22.1 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், எதற்காகச் சட்டம் போட்டு பெண்களின் திருமண வயதை 21 வயதாக உயர்த்த வேண்டும்?

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதால் அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை, வளர்ச்சிக் குறைபாட்டைச் சரிசெய்திட முடியும் என முன்வைக்கும் வாதமும் தவறானது. பெண்களுக்கு குழந்தைப்பருவம் முதல் ஊட்டச்சத்துமிக்க, சரிவிகித உணவு போதிய அளவில் கிடைக்காததே அவர்களின் வளர்ச்சி குறைவுக்கு முக்கியக் காரணம். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யாமல் திருமண வயதை உயர்த்துவதின் மூலம் இதைச் சரிசெய்திட இயலாது.

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதால், சட்டத்திற்குப் புறம்பான கருக்கலைப்புகளும், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளும், அதனால் ஏற்படும் பேறுகாலத் தாய்மார்களின் உயிரிழப்புகளும் அதிகரிக்கும். ஏற்கனவே, கருக்கலைப்பில் 56 விழுக்காடு பாதுகாப்பற்ற கருக்கலைப்பாக உள்ளது. பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் ஒரு நாளைக்கு 10 முதல் 13 பெண்கள் இறக்கின்றனர்.

பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதத்தில் 8 முதல் 20 விழுக்காடு கருக்கலைப்பு, ரத்தசோகை, இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இந்நிலையில் இவ்வாறு, திருமண வயதை உயர்த்துவது பேறுகாலத் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை எவ்வாறு குறைக்கும்? அது சட்டத்திற்குப் புறம்பான கருக்கலைப்பு, பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளை அதிகரிக்கவே செய்யும். எனவே, திருமண வயதை உயர்த்துவதால், பேறுகாலத் தாய்மார்களின் இறப்புவிகிதம் குறையும் என்ற மத்திய அரசின் வாதம் தவறானது.

சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஒரு பெண் தான் விரும்பும் நபரைத் திருமணம் செய்துகொண்டு அச்சமின்றி சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகளால், பெண்களின் சமூகப் பொருளாதார, கலாசார வாழ்வில் முற்போக்கான மாற்றங்களைச் செய்வதால், சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதால், கல்வி வேலை வாய்ப்பை உறுதி செய்வதால், இளம் வயதில், அதாவது 19 முதல் 21 வயதுக்குள் திருமணங்கள் செய்துகொள்வதைத் தவிர்க்கக்கூடிய சூழலை, வாழ்நிலையை உருவாக்க முடியும்.

அத்தகைய தீர்வே, சரியானதாகவும், சிறந்ததாகவும், சிக்கல்கள் குறைந்ததாகவும் அமையும். தற்போது நம் நாட்டிலும்கூட சட்டரீதியிலான திருமண வயதைத் தாண்டி, சராசரி திருமண வயது அதிகரித்துக் கொண்டே வருவது இதை உறுதிசெய்கிறது. எனவே, மத்திய அரசு பெண்ணின் திருமண வயதை சட்ட ரீதியாக உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மதுரையில் எலும்பு வங்கி - திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

ABOUT THE AUTHOR

...view details