சென்னை: வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் வரும் 18ஆம் தேதி வரை, அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்; நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்; வெப்பநிலை குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.