பார்சல் மேலாண்மைத் திட்டம்
நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் சிறிய சரக்குகள் பார்சல்களாக பதிவு செய்யப்படுகின்றன. முக்கிய நகரங்கள், நடுத்தர நகரங்களில் உள்ள சிறு-குறு வர்த்தகர்கள், தங்களுடைய உற்பத்திப் பொருள்களை முக்கிய வர்த்தக நகரங்களுக்கு வேகமாக, நம்பி, குறைந்த செலவில் அனுப்புவதற்கு இந்தப் பார்சல் சேவை உதவி புரிகிறது.
பொதுமக்களும் தங்கள் இருசக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை அனுப்புவதற்கு இந்தப் பார்சல் போக்குவரத்து உறுதுணையாக உள்ளது. பார்சல் கட்டணம் அனுப்பப்படும் பொருள்களின் எடை, அளவைப் பொறுத்தே அமைகிறது. தற்போது ரயில்வே பார்சல் சேவை 'பார்சல் மேலாண்மைத் திட்டம்' என்ற பெயரில் நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 84 ரயில் நிலையங்களில் பார்சல் பதிவும் போக்குவரத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது கட்டமாக 143 ரயில் நிலையங்களிலும், மூன்றாவது கட்டமாக 523 ரயில் நிலையங்களிலும் பார்சல் சேவை கணினி மயமாக்கப்பட உள்ளது.
சிறப்பம்சங்கள்
பார்சல் மேலாண்மைத் திட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தை பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் www.parcel.indianrail.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் பார்சல்களை அனுப்ப 120 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பார்சல் அனுப்புவதற்கான ரயில் போக்குவரத்து வசதிகளை அறிந்து கொள்ளலாம். பதிவுபெற்ற வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலமாகவே பார்சல் பதிவு செய்ய விண்ணப்பம் அனுப்பலாம். அதன்மூலம் உத்தேச பார்சல் கட்டணத்தையும் அறிந்து கொள்ளலாம். .
பயணிகள் ரயில்களில் சரக்குகளை அனுப்ப பார்சல் வேன்கள் இணைக்கப்பட உள்ளன.
கணினி மயமாக்கப்பட்ட பார்சல் அலுவலகங்களில் பார்சல் பதிவு செய்யும்போது அந்தப் பொருள்களின் எடை குறித்த தகவல், மின்னணு எடை இயந்திரம் மூலமாக கணிப்பொறிக்கு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.