தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது ரயில்வே நிர்வாகம்! - சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து சம்பவத்தை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது. மேலும் ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

By

Published : Apr 25, 2022, 9:06 PM IST

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் பணிமனையிலிருந்து 1-ஆவது நடைமேடைக்கு நேற்று(ஏப்ரல்.24) மின்சார ரயில் ஒன்று வந்தது. அப்போது திடீரென அந்த ரயில் தடம் புரண்டு நடைமேடை சுவரை இடித்து மேலே ஏறி, நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரயில் இன்ஜின் மற்றும் ஒரு பெட்டி, நடைமேடை மீது ஏறியதால் ஒன்றாவது நடைமேடை அருகே காத்திருந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.

ரயில் நிற்பதற்காக வந்த நிலையில், திடீரென பெரும் சத்தத்துடன் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலை ஓட்டி வந்த ரயில் ஓட்டுநர் பவித்ரன், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து ஏற்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மின்சார ரயிலில் பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்தினாரா என ரயில் ஓட்டுநர் பவித்ரனிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விபத்தில் சிக்கிய ரயிலை நடைமேடை ஒன்றிலிருந்து இன்று(ஏப்ரல்.25) அதிகாலையில் துரிதமாக செயல்பட்டு அப்புறப்படுத்தினர்.

ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு: இந்த நிலையில் ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா ராம் அளித்தப் புகாரின் அடிப்படையில் எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 279- உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் இயக்குதல் மற்றும் ரயில்வே சட்டப்பிரிவுகளான 151- ரயில்வே சொத்தை சேதப்படுத்துதல், 154- ரயில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமான செயலில் ஈடுபடுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலர் பிரேம்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் மெக்கானிக்கல், சிக்னல் ஆப்ரேட்டிங் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை அலுவலர்கள் இடம் பெற்று உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு ரயிலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து நடந்ததா? ரயில் ஓட்டுநரின் தவறா? என விசாரணை நடத்த உள்ளனர். ஓட்டுநர் பவித்ரனிடம் விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை சென்னை கோட்ட ரயில்வே மேலாளரிடம் ஒப்படைக்க உள்ளதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஒன்றும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: என்ன நடந்தது?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details