தமிழ்நாடு பாஜகவின் மாநில, மாவட்ட, உள்கட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலாளருமான முரளிதர ராவ், மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்தத் தலைவர் இல. கணேசன், தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "ரஜினிகாந்த் எதை மனதில் வைத்துக்கொண்டு பேசினார் என்று தெரியவில்லை. மத்திய அரசு மூலமாக அவருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கெளரவத்துக்கு பாராட்டு தெரிவிக்கக்கூடிய வகையில் அவரை நான் கடைசியாக சந்தித்துப் பேசினேன். அரசியல் ரீதியாக எதுவும் நாங்கள் பேசவில்லை.
வள்ளுவர் ஆரம்ப காலத்திலிருந்து தெய்வப் புலவராகத்தான் அறியப்பட்டாரே தவிர சாதாரண கவியாக அறியப்படவில்லை. அவர் எந்த ஆடையை உடுத்திக்கொண்டிருந்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நெற்றி முழுக்க உடல் முழுக்க திருநீறு அணிந்து தெய்வ வடிவம் போன்றுதான் அவர் நமக்கு அறிமுகமானார்.
அதனால் இனி எந்தவொரு தனி நபரும் எந்தவொரு அமைப்பும் அவருக்கு காவி கட்ட தேவையில்லை. ஏனென்றால் அவர் காவியோடுதான் இருந்தார். 'நீ பார்த்தாயா?' என்று கேட்டால் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன் அவருக்கு வடிவம் கொடுக்கப்பட்டபோது ருத்ராட்சம், விபூதி அணிந்து கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்" என்றார்.
எனக்கு காவி பூச முடியாது என்று ரஜினிகாந்த் பேசியது குறித்த கேள்விக்கு, "ரஜினியை காவிமயமாக்க வேண்டுமா? ஆக்க வேண்டிய அவசியமில்லை. யாரும் அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. மற்றவர்கள் முயற்சி எடுக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. என்னுடைய வேலை அது இல்லை. இன்றைய ரஜினி அப்படியே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டு மக்களும் அதையே விரும்புகின்றனர். திருவள்ளுவரையும் ரஜினிகாந்தையும் காவிமயமாக்க முயற்கிகள் எதுவும் செய்யவில்லை" என பதிலளித்தார்.