இரவு நேரங்களில் நகரத்தில் ரோந்து வரும் காவலர்களுக்கு சற்றும் சளைக்காதவை தெருநாய்கள். நள்ளிரவில் தெருநாய்கள் குரைப்பதிலிருந்தே தெரிந்துவிடும், அவற்றுக்கு பரிச்சயமில்லாத, புதிதாக யாரோ தெருவுக்குள் நுழைகிறார்கள் என்பது. இவ்வாறு சென்னை மாநகரத்தில் மட்டும் தெருக்கு 10 நாய்கள் உள்ளன. இரவு நேரங்களில் இவை தெருவுக்கு பாதுகாவலனாக இருந்தாலும், அந்நேரங்களில் பயணிப்போருக்கு அச்சுறுத்தலாகவும் சில வேளைகளில் இருக்கின்றன. இவற்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பலர் பாதிக்கப்பட்டனர். மேலும், தெரு நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதையடுத்து தான், சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
அதன்படி, ஒரு மண்டலத்திற்கு ஒரு நாய் புடிக்கும் வாகனம் வாங்கப்பட்டு, வாகனத்திற்கு ஒரு ஓட்டுநர் உள்ளிட்ட, ஐந்து பயிற்சி பெற்ற நாய் பிடிக்கும் நபர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள், தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பட்டாம்பூச்சி வடிவிலான வலையை பயன்படுத்தி நாய்களை பிடித்து, வாகனங்களில் ஏற்றி, கருத்தடை செய்யும் மையத்திற்கு கொண்டு வருகின்றனர். ஒரு தெருநாய்க்கு கருத்தடை செய்தால், கிட்டத்தட்ட 5 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர், அதனை பிடித்த இடத்திலேயே மீண்டும் கொண்டு சென்று விட்டுவிடுவர். அதுமட்டுமின்றி அத்தகைய தெருநாய்களுக்குகு வெறி பிடிக்காமல் இருக்க தடுப்பூசியும் போடப்படுகிறது.
நாய்களுக்கு கருத்தடை செய்ய சென்னையில் லாயிட்ஸ் காலனி, புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை ஆகிய மூன்று மையங்கள் உள்ளன. இது தவிர ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா மற்றும் எம்.எஸ்.பி.சி.ஏ ஆகிய இரு தொண்டு நிறுவனங்களிலும் கருத்தடை செய்யப்படுகிறது. ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரை மொத்தம் 11 ஆயிரத்து 554 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2019 ஜூலை மாதம் 1,137 நாய்களுக்கும், 2020 ஜனவரியில் 1,017 நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு, கடந்த ஆண்டு ஜனவரியில் 12,096 வெறிநாய்கள் மாநகராட்சி பணியாளர்களால் பிடிக்கப்பட்டுள்ளன.