இரா. துரைக்கண்ணு 1948ஆம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள ராஜகிரியில் பிறந்தார். இளங்கலைப் பட்டம் பெற்ற துரைக்கண்ணு, அதிமுக சார்பில் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக நின்று கடந்த 2006, 2011, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு வேளாண்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 13ஆம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்க சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, விழுப்புரம் அருகே செல்கையில் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதனையடுத்து மேல்சிகிச்சைக்காக அவர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனிடையே துரைக்கண்ணுவுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.