தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் அதிவேக இணைய சேவை வழங்குவதற்கு மாநில அரசு சார்பாக பாரத்நெட் டெண்டர் விடப்பட்டது. அதில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். அதன் காரணமாக பாரத்நெட் டெண்டரை மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் ரத்து செய்ய உத்தரவிட்டது.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊழல் காரணமாக டெண்டரை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. அப்படியிருக்கையில் அதில் ஊழல் இல்லை, முறைகேடு இல்லை, மத்திய அரசு பாரத்நெட் திட்ட ஒப்பந்தப் புள்ளிகளுக்குத் தடை விதிக்கவில்லை என்றெல்லாம் பச்சைப் பொய் சொன்ன தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், இப்போது ராஜினாமா செய்வாரா? அல்லது பணி நீக்கம் செய்யப்படுவாரா?"என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் "எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தான் சொல்லும் ஆலோசனைகளை முதலமைச்சரோ, தமிழ்நாடு அரசோ கேட்கவில்லை என பழியை சுமத்தியிருக்கிறார்.
அவருக்கு ஆலோசனைகள் வழங்கவே வாடகைக்கு ஆள் வைத்திருக்கும் நிலையில், அவர் எவ்வாறு அரசுக்கு ஆலோசனைகள் வழங்க முடியும்? அதிமுக ஆட்சியில் இருக்கக்கூடாதென நினைக்கின்ற வகையில் செயல்பட்டும் அவர், எவ்வாறு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட முடியும்?
அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்து அதன்பின் நீதிமன்றத்தில் குட்டு வாங்கி வழக்கை வாபஸ் பெறும் கட்சிதான் திமுக என்பதை அனைவரும் அறிவார்கள். பாரத்நெட் டெண்டர் திட்டம் என்பது ஏறத்தாழ தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 544 கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழைகள் மூலம் இணைக்கும் திட்டமாகும்.
அந்தத் திட்டம் நிறைவேறினால் SVC போன்ற கேபிள் டிவி நிறுவனங்களின் எதிர்காலமெல்லாம் கேள்விக்குறியாகிவிடும். அதனால்தான் கேபிள் டிவியில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்தத்திட்டத்தினை ஆரம்பத்திலேயே முடக்குவதற்காக செயல்படுகின்றனர். இதுவரை 100 முறை இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது எனப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் அறிக்கை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்.
அதை வழக்காக நீதிமன்றத்தில் தொடர்ந்து, ஒப்பந்தப்புள்ளியே விடப்படாத, நிதி ஒதுக்கப்படாத இந்தத் திட்டத்தில் எப்படி முகாந்திரமில்லாத குற்றம் சாட்டுகின்றீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பதிலில்லாமல் வழக்கை வாபஸ் பெற்றார். இந்த பாரத்நெட் திட்டத்தில் முறைக்கேடு நடந்ததாக அறப்போர் இயக்கமும் எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், விதிமுறைகளில் மேக் இன் இந்தியா(Make in India) 2017 விதிமுறைகளை முழுமையாக உள்ளடக்கி இந்த ஒப்பந்தப்புள்ளி மறு அழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மறு அழைப்பு, மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டுமென்றால் ஏற்கனவே கொடுத்தது ரத்து செய்யப்பட வேண்டும் என்பது முறை.
அப்படிதான் ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏதோ திட்டமே ரத்து செய்யப்பட்டது போல ஸ்டாலின் இந்தத் திட்டத்தில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புகின்றார். திருத்திய நிபந்தனைகளுடன் மறு டெண்டர் கோரலாம் என மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது. அதில் எங்கே திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எங்கே ஊழல் என்று சொல்லப்பட்டிருக்கிறது?.
இதுபோல், வாடகைதாரர்கள் கொடுக்கின்ற அறிக்கையை நீங்கள் வெளியிட்டால் மக்களால் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள். தனிமைப்படுத்தப்படுவீர்கள். உயிர் பயத்தில் இருக்கின்ற மக்களுக்கு உங்கள் அறிக்கையில் எந்த ஆறுதல் வார்த்தையும் இல்லை, அச்சம்தான் ஏற்படுகிறது. பாரத் நெட் திட்டத்தில் மிக விரைவாக டெண்டர் விடப்பட்டு 2021 பிப்ரவரிக்குள் பணிகள் முடிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’களத்தில் செயல்படாமல் வீட்டிலிருந்து அறிக்கை வெளியிடுபவர் ஸ்டாலின்’ - அமைச்சர் உதயகுமார்