தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காயிதே மில்லத் அறக்கட்டளை நிலத்தை திரும்பப் பெறலாம்: உயர்நீதிமன்றம் - மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

சென்னை: காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தாமல் உள்ள 29.33 ஏக்கர் நிலத்தை திரும்ப எடுக்க தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

hc

By

Published : Jul 11, 2019, 7:36 AM IST

காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை விடுத்த கோரிக்கையை ஏற்று, 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, நன்மங்கலத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை, ஒதுக்கீடு செய்தது. ஏக்கருக்கு 100 ரூபாய் வீதம், 4 ஆயிரம் ரூபாய் தொகையை அறக்கட்டளை அரசுக்கு செலுத்தியது.

அவ்வாறு பெறப்பட்ட 40 ஏக்கர் நிலத்தில், 29.33 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தவில்லை என்றும், மத்திய அரசின் சட்டப்படி அதை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் அந்த அறக்கட்டளைக்கு தமிழ்நாடு வனத்துறை 2012-ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கல்வி பயன்பாட்டுக்காக நிலத்தை பயன்படுத்துவதை வன ஒழிப்பு நடவடிக்கையாக கருத முடியாது எனவும், 29.33 ஏக்கர் நிலத்தை அரசு திரும்ப எடுக்க எந்த காரணமும் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு, மத்திய அரசு 1980-ல் கொண்டு வந்த வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அரசு தலைமை வழக்கறிஞர், நன்மங்கலம் பகுதியில் அரசு நடத்திய ஆய்வில், 29.33 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் அதை திரும்ப எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய வன பாதுகாப்பு சட்டப்படி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என அறிவிக்கும்படி கேட்க காயிதே மில்லத் அறக்கட்டளைக்கு எந்த உரிமையும் இல்லை என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், அரசு கருணையால் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் 10.67 ஏக்கர் நிலத்தை சுற்றி 8 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் எனவும், அப்பகுதியில் ஆறு மாதங்களில் 500 மரங்களை நடவேண்டும் எனவும் இந்த நிபந்தனையை நிறைவேற்றாவிட்டால் 10.67 ஏக்கர் நிலத்தையும் அரசு எடுத்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

10.67 ஏக்கர் நிலத்தில் உரிய அனுமதி பெற்று தான் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த 10.67 ஏக்கர் நிலத்துக்கு வெளியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஆறு மாதங்களுக்கு பிறகு புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details