புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரை, புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (ஜூலை 19) சந்தித்து கடிதம் அளித்தார்.
அதில், "கர்நாடக மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரி நதிநீர்ப் பங்கீடு விஷயத்தில் நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் எந்தத் தீர்ப்பையும் மதித்து நடந்ததில்லை.
உரிமையை நிலைநாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர்கள்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறையும் சட்டப் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் உரிமையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் பெற்றுத் தந்தனர்.
கர்நாடக அரசின் அணை கட்டும் அறிவிப்பு
அதன்மூலம் காவிரியின் கடைமடைப் பகுதியான, காரைக்கால் மாவட்டத்துக்கு தங்குதடையின்றி உரிய தண்ணீர் கிடைத்தது. இந்நிலையில் காவிரி நீர் பாயும் இடத்திற்குச் சம்பந்தமில்லாத, பெங்களூருவிலிருந்து 140 கிமீ தூரத்தில் உள்ள மேகதாதுவில், குடிநீர் தேவை என்ற பெயரில் புதியதாக கர்நாடக அரசு அணை கட்டப்போவதாக அறிவித்துள்ளது.
பாலைவனங்களாக மாறும் சூழ்நிலை
கர்நாடக அரசின் சட்டவிரோத அணை கட்டும் போக்கால் ஒட்டுமொத்த தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு, விவசாய நிலங்கள் பாலைவனங்களாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.
நேரில் வலியுறுத்திய தமிழ்நாடு அனைத்துக் கட்சிக்குழு
இதில் உள்ள ஆபத்தை உணர்ந்த, தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சரைச் சந்தித்து அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தி மனு அளித்து எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர்.
எதிர்ப்பை நேரில் வலியுறுத்த ஏற்பாடு செய்க
புதுச்சேரி மாநிலத்தின் எதிர்ப்பு, ஏற்கனவே கடிதம் மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நேரில் சென்று வலியுறுத்துவது, நம் மாநில உரிமையை வென்றெடுக்க உதவியாக இருக்கும்.
காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்கால் மாவட்ட விவசாயிகள் நலன்கருதி, நாமும் பொதுப்பணித் துறை அமைச்சர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களோடு, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை நேரில் சென்று வலியுறுத்த உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மேகதாது அணைக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு விவசாய சங்கம்