தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, திமுக அரசைக் கண்டித்து கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று (ஜூலை.28) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அன்பழகன் பேசுகையில், “தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் 500க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், பதவியேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகியும், தேர்தல் கால அறிவிப்பில் ஒன்றைக் கூட செயல்படுத்தவில்லை.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் கண்டனம்
நீட் தேர்வு ரத்து, பெட்ரோலுக்கு ஐந்து ரூபாய், டீசலுக்கு நான்கு ரூபாய் விலை குறைப்பு, தடையில்லா மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தல், சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் குறைப்பு, விவசாய மக்களுக்கான எண்ணற்ற வாக்குறுதிகள் என அளித்த வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்ற முற்படவில்லை.