சென்னை: தங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் வேண்டுகோளை ஏற்று ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர்.
முன்னதாக இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவாகும். இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். இதன் ஓர் அங்கமாக 2020-2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று, அதனைக் கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தற்போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணிமெய்யம்மை செவிலியர் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்வி நிறுவனங்களை 27.01.2021 நாளிட்ட உயர்கல்வி (எச்1) துறை அரசாணை (நிலை) எண் 16-ன் வாயிலாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.