சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக மேலும் ஒரு வார காலத்திற்குத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளதால் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலில் வருகிறது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் பேருந்து சேவை தொடங்குகிறது. குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் 1400 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மகளிர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளி உள்ளிட்டப் பேருந்து பயணிகள் இன்று முதல் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். இதற்கான மாதிரி பயணச்சீட்டு சிவப்பு, நீலம், ரோஸ் உள்ளிட்ட நிறங்களில் வெளியிடபட்டது.