சென்னை: கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 30.11.2021 நாளிட்ட கடிதத்தில் கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்மழை பெய்து வருகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்திற்கு பொதுப் போக்குவரத்து அனுமதி
ஏற்கனவே ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கிடையே பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதை போன்று கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டுதல்படி அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.