தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் படம் இனி கூடாது! - Public money cannot misused

பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்ட பொருள்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் படம் இனி கூடாது
புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் படம் இனி கூடாது

By

Published : Sep 7, 2021, 2:31 PM IST

Updated : Sep 7, 2021, 3:58 PM IST

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருப்பில் உள்ள, முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் அச்சிடப்பட்ட நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகளைக் கைவிடும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

அந்த மனுவில், தற்போது இருப்பில் உள்ள நோட்டுப் புத்தகங்கள், எழுதுப் பொருள்களில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வழங்கலாம் எனவும், அதை விடுத்து, இருப்பில் உள்ள நோட்டுகள், பைகளை விநியோகிக்காமல் தவிர்ப்பதன் மூலம் பொதுமக்கள் வரிப் பணத்தை வீணடிக்கப்படுவதாகவும், மாறாக அவற்றை மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களைப் படங்களை அச்சிடத் தடைவிதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர், முன்னாள் முதலமைச்சர் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தக பைகள், 10 லட்சம் எழுதுபொருள்கள் வீணாக்கப்பட மாட்டாது எனவும், அவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், பள்ளி புத்தகப் பைகளில் படத்தை அச்சிடுவதை முதலமைச்சர் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதைப் பதிவுசெய்த நீதிபதிகள், பள்ளி மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால் புத்தகப் பைகள், புத்தகங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை அச்சிட்டு, அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

அரசு நிதி விளம்பரத்திற்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 36 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Last Updated : Sep 7, 2021, 3:58 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details