சென்னை:எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் குழந்தைகளின் நலன் குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தோம். இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது.
தமிழ்நாட்டில் 282 குழந்தைகள் ஹச்1 என்1 என்று சொல்லக்கூடிய இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். பருவமழைக்காலங்களில் ஈரப்பதம் காரணமாக இது உலகளவில் வரக்கூடியது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 129 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இதில் யாருக்கும் ஹச்1 என்1 இல்லை. 8 பேர் வைரஸ் காய்ச்சலுக்கும், 121 பேருக்கு சாதாரண காய்ச்சல் தான். ப்ளு காய்ச்சல், இருமல், தும்மல் ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். இருமல், தும்மல் நீர்திவளைகள் மூலம் காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவும்.
இரண்டாண்டுகளாக இது அதிகம் பரவாமல் இருக்க நாம் கரோனா விதிமுறைகளை கடைபிடித்தது தான் காரணம். ஆனால், இன்று அது முறையாக கடைபிடிக்கப்படவில்லை. தனிமனித இடைவெளி கடைபிடிப்பது அவசியம். காய்ச்சல் உள்ளவர்களிடமிருந்து சற்று இடைவெளி விட்டு இருப்பது நல்லது.
2 முதல் 3 வயது குழந்தைகள் வைத்திருக்கக்கூடிய பெற்றோர்கள், குழந்தைக்கு உடல் நலக்குறைவு இருப்பின் மற்ற குழந்தைகளை சற்று தள்ளி இருக்க வைப்பது நல்லது.
மருத்துவர் துறை அதிகாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களுக்கும் சரியான மருத்துவ ஒப்புகைச்சீட்டு இல்லாமல் மருந்துகளை கேட்டால் மருந்துக்கடைகள் தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.