சென்னை: கரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன. இதனால் 2019-20ஆம் கல்வியாண்டில் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
2020-21இல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடையச் செய்யப்பட்டனர். அப்பொழுது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே ஒன்பது, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மட்டும் பதிவுசெய்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்குரிய புதிய தேர்வு மையங்களை அமைப்பதற்கு உரிய கருத்துகளை அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் சேது ராம வர்மா உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே தேர்வு மையங்களாகச் செயல்பட்டுவரும் பள்ளிகள், புதிதாகத் தேர்வு மையங்களை அமைக்க விரும்பும் பள்ளிகளின் விவரங்களை அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.