தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆதரவற்ற முதியவருக்கு பொதுமக்கள் இறுதி மரியாதை - போரூரில் நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை: போரூரில் சாலையோரம் இறந்துகிடந்த பிச்சைக்காரருக்கு, அப்பகுதி பொதுமக்கள் இறுதிச் சடங்கு செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Corona lockdown in chennai
chennai corona status

By

Published : Jun 1, 2020, 12:31 PM IST

கரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்பத்தில் ஒருவர் இறந்து போனால்கூட, அவரது இறுதிச் சடங்கில் நெருங்கிய சொந்தங்கள், உறவினர்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவி வருகிறது. ஆனால், சென்னையிலுள்ள போரூரில் சாலையோரத்தில் இறந்துபோன பிச்சைக்காரர் ஒருவருக்கு பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, இறுதிச்சடங்கு செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சென்னை போரூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் ஏராளமான ஆதரவற்றோர் மற்றும் பிச்சைக்காரர்கள் வசித்து வருகின்றனர். கரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு நேரத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அங்குள்ள ஆதரவற்றவர்ளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வந்தனர்.

இதையடுத்து இங்கு 15 ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வசித்து வந்த வயதான நபர் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்து போனார். இதுகுறித்து போரூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த நபர் கரோனா பாதிப்பால், இறந்து போனாரா என விசாரணை செய்த காவல் துறையினர், அவரது இறப்புக்கு கரோனா பாதிப்பு காரணம் இல்லை என உறுதிசெய்தனர்.

இதுதொடர்பாக இவர்களுக்கு வழக்கமாக உணவு அளித்து வந்தவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் இணைந்து இறந்த நபரின் உடலைக் காவல் துறையினர் அனுமதி பெற்று, இறுதிச் சடங்கை செய்தனர்.

தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து, அவர்கள் இறந்தால் எப்படி இறுதிச் சடங்கு செய்வார்களோ, அதுபோல் இறந்து போன முதியவரை குளிப்பாட்டி, சடங்குகள் செய்து உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்தனர். பின்னர் முதியவரின் உடல் போரூரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தினந்தோறும் தாங்கள் உணவளித்து வந்த பிச்சைக்காரர் ஒருவர், இறந்ததற்கு பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details