தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பப்ஜி மதனின் ஜாமீன் மனு வாபஸ்!

பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, ஜாமீன் மனுவை மதன் தரப்பு வாபஸ் பெற்றது.

pubg-madhan
pubg-madhan

By

Published : Jun 6, 2022, 5:09 PM IST

சென்னை: பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் ஆபாசமாகப் பேசி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை தவறான பாதையில் கொண்டு செல்வதாக அளிக்கப்பட்டப்புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதன் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சைபர் சட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, ஜாமீன்கோரி பப்ஜி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விளையாட்டின்போது பேசிய வார்த்தைகளை மட்டுமே காரணம் காட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் விளையாட்டில் கலந்துகொள்ள மதன் அறிவுறுத்தியதாகவும், மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பப்ஜி மதன் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் பண மோசடி செய்த தொகையில் 1 கோடியே 7 லட்சம் ரூபாயும், 2 கார்களையும் காவல் துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விருப்பப்பட்டு விளையாட்டில் சேர்ந்தவர்களிடம் மட்டுமே விளையாட்டின் மூலம் உரையாடியதாகவும், நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையிலேயே உள்ளதாகவும், 316 நாட்களாக சிறையில் உள்ளதாகவும் மதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டில் கலந்து கொண்டவர்களிடம் கரோனா நிதி எனக் கூறி 2 கோடியே 89 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளதாகவும், விளையாட்டில் சேரும் சிறுவர்களை தவறாக வழிநடத்தியதாகவும் காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விளையாட்டைப் பயன்படுத்தி சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் தவறாகப் பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில், மதன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தார். அப்போது மதன் தரப்பில் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி இளந்திரையன், மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முருகனுக்கு பரோல் மறுப்பு, மனைவி நளினி மனு வாபஸ்

ABOUT THE AUTHOR

...view details