சென்னை:யூ-ட்யூபர் மதன் பப்ஜி விளையாட்டின் மூலம் ஆபாச பேச்சுக்களால் இளைய சமுதாயத்தினரின் மனதில் நஞ்சை விதைப்பதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார்கள் குவிந்தன. இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் வைத்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பப்ஜி மதனின் இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டன. மேலும், பப்ஜி மதன் பயன்படுத்திய யூ-டியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்த வழக்கில் மதனுக்கு உதவியாக இருந்த அவருடைய மனைவி கிருத்திகாவையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விளையாட்டு
பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 6ஆம் தேதி மதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மதன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அறிவுரை கழகத்தில் நடத்தப்பட்டு, கடந்த 6ஆம் தேதி மதன் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.