மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் இன்று (ஜூன்.12) 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு சார்பில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் கரோனா தொற்றுக்கான மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு சலுகைகளை அளித்து, அவை குறைவான விலையில் கிடைக்க வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படும் என தெரிகிறது.
கரோனா சிகிச்சையுடன் தொடர்புடைய அனைத்துப் பொருட்களுக்கும் இறக்குமதிக்கான சுங்கக் கட்டணத்தையும் விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு மாநில அரசுகள், ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்க உள்ளன.
முன்னதாக கரோனா சிகிச்சை உபகரணங்கள், மருந்துகளுக்கான சரக்கு - சேவை வரியை ரத்து செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய, மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருந்தது. அதில் மேகாலய நிதியமைச்சர் கான்ராட் சங்மா தலைமை வகித்தார். மேலும் கேரளம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் நிதியமைச்சர்களும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.